IPL 2023 : மாஸ்டர் பிளான் – டேவிட் வில்லிக்கு பதிலாக ரஹானேவுக்கு போட்டியாக சீனியர் இந்திய வீரரை வாங்கிய ஆர்சிபி

David Willey
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் முதல் கோப்பையை வென்று காலம் காலமாக சந்தித்து வரும் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை உடைத்து சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய முதல் 8 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து போராடி வருகிறது. அந்த அணிக்கு பேட்டிங் துறையில் ஃபார்முக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, கேப்டன் டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரை தவிர்த்து தினேஷ் கார்த்திக் போன்ற எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து பெரிய ரன்களை எடுக்காமல் பின்னடைவை கொடுத்து வருகிறார்கள்.

அதற்கு போட்டியாக பந்து வீச்சு துறையிலும் சிராஜ் தவிர்த்து ஏனைய பவுலர்கள் வழக்கம் போல ரன் மெஷினாக செயல்பட்டு வெற்றிகளை தாரை வார்த்து வருகிறார்கள். அதனால் அடுத்த வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் இருந்து வரும் அந்த அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி சமீபத்திய போட்டியில் காயத்தை சந்தித்தார். அந்த நிலையில் அவருடைய காயம் பெரியதாக இருப்பதால் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவதாக பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மீண்டும் தலைவன்:
ஆனால் அவருக்கு பதிலாக இந்திய சீனியர் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2010 முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி டெல்லி, கொச்சி ஆகிய அணிகளில் விளையாடி உள்ளூர் அளவிலும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் 2018 வாக்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தினர்.

குறிப்பாக மிடில் ஆர்டரில் கணிசமான ரன்கள் எடுக்கும் வீரராகவும் எதிரணி பார்ட்னர்ஷிப் அமைத்தால் அதை உடைக்கும் பகுதி நேர பவுலராகவும் செயல்பட்ட அவர் 2019 உலக கோப்பைக்கு பின் மீண்டும் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2018 சீசனில் முதல் போட்டியிலேயே மும்பைக்கு எதிராக காயத்துடன் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் 2019, 2020, 2021 சீசன்களில் முறையே 162, 62, 55 ரன்கள் எடுத்து சுமாராக செயல்பட்டதால் கடந்த வருடத்துடன் விடுவிக்கப்பட்டார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2020 சீசனில் நிறைய போட்டிகளில் சொதப்பி வரலாற்றில் முதல் முறையாக சென்னை லீக் சுற்றுடன் வெளியேற முக்கிய காரணமாகும் வகையில் செயல்பட்ட அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பவுண்டரி அடிப்பது போல் ஃபீல்ல்டர்களை எண்ணி கடைசியில் அவுட்டாகி கடுப்பேற்றியது யாராலும் மறக்க முடியாது. அதனால் தலைவன் கேதார் ஜாதவ் என சென்னை ரசிகர்கள் இப்போதும் அவரை எங்கு பார்த்தாலும் கலாய்ப்பது வழக்கமாகும். மேலும் தற்போது 38 வயதை கடந்து விட்டதால் இந்திய கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் சமீப காலங்களில் உள்ளூர் அளவிலும் பெரிதாக அசத்தாத நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஜியோ சினிமா சேனலில் மராத்தி மொழியில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

அத்துடன் 2016, 2017 சீசனில் 42, 267 என பெங்களூரு அணிக்காகவும் குறைவான ரன்களை எடுத்து சுமாராகவே செயல்பட்ட அவர் 49க்கு ஆல் அவுட்டான போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக 9 ரன்கள் எடுத்ததே ஒரே ஆறுதலாகும். அப்படிப்பட்ட அவரை வம்படியாக அடிப்படை விலையான 1 கோடிக்கு மீண்டும் பெங்களூரு வாங்கியுள்ளதால் இந்த சீசனில் நிச்சயமாக கோப்பையை வெல்லப் போவதில்லை என்று எதிரணி ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : அந்த பையன் ரொம்ப பிரமாதமா பேட்டிங் ஆடுறான். வெற்றிக்கு பின்னர் எதிரணி வீரரை – பாராட்டிய ரோஹித்

ஆனால் இதே போல சீனியர் வீரரான ரகானே சென்னை அணியில் அதிரடியாக செயல்படுவதை பார்த்து அதே திட்டத்தை தங்களது அணியும் கையில் எடுத்துள்ளதாக பெங்களூரு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். குறிப்பாக சிரிக்கும் எதிரணிகளுக்கு கேதர் ஜாதவ் பதிலடி கொடுப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Advertisement