ஹெய்டன், கிளார்க்கை முந்திய வார்னர்.. லெஜெண்ட் லாராவை முந்தி பாகிஸ்தானை வெளுப்பதில் புதிய சாதனை

David Warner 26
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு பெர்த் நகரில் துவங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளிலேயே அரை சதமடித்தார். அவருடன் மறுபுறம் சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜா 126 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்து 41 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

வெளுக்கும் வார்னர்:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26வது சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் வந்த ஸ்டீவ் ஸ்மித் 3வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ரன்களிலும் ட்ராவிஸ் ஹெட் 4வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்களிலும் அவுட்டானார்கள்.

அடுத்த சில ஓவர்களிலேயே இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார். குறிப்பாக இத்தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் தன்னுடைய கடைசி தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்க்கு நிகராக 26 சதங்களை அடித்த வீரராக வார்னர் பெருமை பெற்றார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. குமார் சங்ககாரா : 12
2. அரவிந்தா டீ சில்வா : 11
3. டேவிட் வார்னர் : 10*
4. பிரையன் லாரா : 9

இதையும் படிங்க: இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் இஷான் கிஷனுக்கு இடமில்லை – இதுதான் காரணம்

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 8 இன்னிங்ஸில் 5 சதம் உட்பட வார்னர் 1009* ரன்களை 144.14 என்ற சராசரியில் வெளுத்து வாங்கி வருகிறார். இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேத்தியூ ஹெய்டன் (8643), மைக்கேல் க்ளார்க் (8625) ஆகிய ஜாம்பவான்களை முந்தி அதிக ரன்கள் அடித்த 5வது ஆஸ்திரேலிய வீரராகவும் டேவிட் வார்னர் (8651*) சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய 346/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் மார்ஷ் 15*, கேரி 14* ரன்களுடன் இருக்கும் நிலையில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமீர் ஜமால் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Advertisement