அவங்களுக்காக எங்கள ஏன் டார்ச்சர் பண்றீங்க.. பிசிசிஐ’யை விளாசிய மேக்ஸ்வெலுக்கு.. வார்னர் மாஸ் பதிலடி

Warner Maxwell
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

வார்னர் பதிலடி:
மேலும் 40 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டியில் தண்ணீர் இடைவேளையின் போது டெல்லி மைதானத்தில் ராட்சத மின்விளக்குகள் அணைக்கப்பட்டு வண்ணமயமான லேசர் விளக்குகளுடன் சினிமா மற்றும் தாய்மண்ணே வணக்கம் போன்ற தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் இந்த உலகக் கோப்பையில் சென்னை உட்பட அனைத்து மைதானங்களிலும் இடைவெளியின் போது இந்த நிகழ்வுகள் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடத்தப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தும் திட்டங்களில் ஒன்றாக இதை செய்து வரும் பிசிசிஐ அதற்கு பல கோடி ரூபாய்களையும் செலவு செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தண்ணீர் இடைவேளையில் இப்படி செய்வது வீரர்களுக்கு தொல்லையாக அமைவதாக மேக்ஸ்வெல் போட்டியின் முடிவில் விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“பிக்பேஷ் போட்டியின் போது பெர்த் நகரிலும் இதே போல நடந்தது. இது எனக்கு தலைவலியை கொடுப்பது போல் உணர்ந்தேன். ஏனெனில் இது என் கண்களை சீரமைக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வைக்கிறது. அதனால் வீரர்களைப் பொறுத்த வரை இது முட்டாள்தனமான யோசனை என்று நினைக்கிறேன். எனவே முடிந்த வரை இதை புறக்கணிக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் ரசிகர்களுக்கு இது சிறப்பாக இருந்தாலும் வீரர்களுக்கு நன்றாக இல்லை” என்று கூறினார்.

Warner Tweet

ஆனால் அதற்கு ரசிகர்கள் இல்லாமல் நாம் இல்லை என்று அவருக்கு ட்விட்டரில் டேவிட் வார்னர் பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “அந்த ஒளிகாட்சியை நான் நாம் மிகவும் விரும்பினேன். என்ன ஒரு சிறப்பான சூழ்நிலை. இவை அனைத்தும் ரசிகர்களை பற்றியது. அவர்கள் இல்லாமல் நாங்கள் விரும்பியதை செய்ய முடியாது” என்று கூறினார்.

Advertisement