2018இல் பந்தை சேதப்படுத்தியது சரியா? ஓய்வு அறிவிப்பில் எழுந்த கேள்வியால் வசமாக சிக்கிய வார்னர் – பதில்

David Warner 2
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட தொடருடன் நட்சத்திர துவக்க ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக 2024 புத்தாண்டு தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அறிவித்துள்ளார். கடந்த 2009இல் அறிமுகமான அவர் 2015 மற்றும் 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர்.

மேலும் கடந்த சில வருடங்களாக ஃபார்மை இழந்து தடுமாறிய போது எழுந்த விமர்சனங்களுக்கு 2021 டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்த அவர் ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த அதிரடி துவக்க வீரர்களில் ஒருவராக அறியப்படும் அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற உள்ளார்.

- Advertisement -

2018 விவகாரம்:
அப்படி சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படும் டேவிட் வார்னர் கேரியரில் 2018 பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கு காலத்தால் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாக அமைந்தது என்றே சொல்லலாம். அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2018 கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பான் கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சியில் அம்பலமானது.

இறுதியில் அதற்காக நடத்தப்பட்ட விசாரணையில் அது நிரூபனமானதால் அந்த மூவருக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக 12 மாதங்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்ற டேவிட் வார்னர் வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்காக கேப்டன்ஷிப் செய்வதற்கு தடை பெற்றார். இந்நிலையில் 2024 புத்தாண்டு தினத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் போது அது பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.

- Advertisement -

அதற்கு டேவிட் வார்னர் பதிலளித்தது பின்வருமாறு. “இந்த கேள்வி வரும் என்று எனக்கு தெரியும். தற்போது அதை திரும்பிப் பார்க்கும் போது அந்த தருணத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைமை இயக்குனர் நிக் ஹாக்லி தம்மால் முடிந்த சிறந்தவற்றை செய்தார். அந்த விவகாரத்தை வாரியத்திடம் அவர் எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: இன்னும் அதுல முன்னேறம் தேவை.. 2023இல் பதிலடி கொடுத்த ராகுல் மீது திருப்தியடையாத வெங்கடேஷ் பிரசாத்

“அதிலிருந்து நான் எப்போதோ நகர்ந்து விட்டேன். அதன் பின் ஐபிஎல் மற்றும் ஐஎல்டி20 போன்ற தொடர்களில் அணியை வழி நடத்துவதற்கான வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தன. அதில் என்னுடைய கேப்டன்ஷிப் பதவியை நான் மகிழ்ச்சியுடன் செய்தேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து வரும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் வார்னர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement