சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் உலக சாதனையை சமன் செய்த – டேவிட் வார்னர்

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வென்று 1 – 0* எந்த கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதியன்று பாக்ஸிங் டே போட்டியாக உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா மீண்டும் சுமாராக செயல்பட்டு 189 ரன்களுக்கு சுருண்டது.

கேப்டன் டீன் எல்கர் 26, எர்வீ 18 என, பவுமா 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வெரின் 52 ரன்களும் மார்கோ யான்சென் 59 ரன்களும் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவஜா 1 ரன்னிலும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 14 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 75/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் மற்றொரு புறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சச்சினை சமன் செய்த வார்னர்:
அதில் முதலாவதாக அரை சதம் கடந்த டேவிட் வார்னர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை சேர்த்து சதத்தையும் விளாசினார். கடைசியாக கடந்த 2020 ஜனவரியில் சதமடித்திருந்த அவர் அதன்பின் அடுத்த சதமடிக்க முடியாமல் இருந்ததால் சந்தித்த விமர்சனங்களை 1086 நாட்கள் கழித்து இப்போட்டியில் அடித்து நொறுக்கினார். அதனாலேயே அதை வெறித்தனமாக காற்றில் பறந்து சூப்பர் மேன் போல கொண்டாடிய அவர் விமர்சனங்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்தார்.

அதை விட தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்த இப்போட்டியில் சதமடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 100வது போட்டியில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையும் 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அவருடன் தொடர்ந்து பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 3வது விக்கெட்டுக்கு 275 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்திய போது 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் அவுட்டாகாமல் அடம் பிடித்த டேவிட் வார்னர் நேரம் செல்ல செல்ல மேலும் அட்டகாசமாக பேட்டிங் செய்து இரட்டை சதமடித்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங் 2 இன்னிங்ஸிலும் சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். மேலும் உலக அளவில் ஜோ ரூட்டுக்குப் பின் (இந்தியாவுக்கு எதிராக, 2021இல்) 100வது போட்டியில் இரட்டை சதமடிக்கும் 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

அத்துடன் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய 100ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்திருந்த அவர் தன்னுடைய 100வது ஒருநாள் மற்றும் 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றை படைத்து உலக அளவில் 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கோர்டான் க்ரீனிட்ஜ் மட்டுமே தன்னுடைய 100வது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் சதமடித்தவர்.

- Advertisement -

இவை அனைத்தையும் விட 25 டெஸ்ட், 19 ஒருநாள், 1 டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 45 சதங்களை தொடக்க வீரராக அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் உலக சாதனையையும் சமன் செய்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடக்க வீரராக 45 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்து வரும் 2 சீரிஸ்ல இவருக்கு வாய்ப்பு குடுங்க. பெரிய ஆளா ரொம்ப நாள் டீம்ல இருப்பாரு – வாசிம் ஜாபர் கருத்து

அப்படி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வெறித்தனமாக விளையாடிய அவர் தனது இரட்டை சதத்தை வெறித்தனமாக கொண்டாடியதால் லேசான காயத்தை சந்தித்து இறுதியில் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 200* ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட்டாகி ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார்.

Advertisement