WTC Final : ஃபைனலுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் – மொத்தமாக விடை பெறும் தேதி அறிவிப்பு

David-Warner
- Advertisement -

இங்கிலாந்தில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்வதற்காக இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இடது கை பேட்ஸ்மேனாக ஓப்பனிங் இடத்தில் அதிரடியாக விளையாடிய அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். குறிப்பாக கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹைடன் ஆகியோருக்கு பின் 2011 முதல் 3 வகையான வகையான கிரிக்கெட்டிலும் நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

- Advertisement -

ஓய்வு அறிவிப்பு:
அதே போல ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை 2016இல் ஹைதெராபாத் கோப்பையை வெல்ல கேப்டனாக முக்கிய பங்காற்றிய அவர் இந்திய ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அவர் 2021இல் சுமாராக செயல்பட்டதால் ஹைதராபாத் நிர்வாகம் கழற்றி விட்டது.

அதே போல் சர்வதேச அளவிலும் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறிய அவருக்கு 2018இல் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியதால் ஆஸ்திரேலிய வாரியத்தில் சமீப காலங்களாகவே ஆதரவுக்கு பதில் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும் ஐபிஎல் 2023 தொடரில் லீக் சுற்றுடன் டெல்லி வெளியேறும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவர் தொடர்ந்து இடத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் அடுத்ததாக நடைபெறும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஃபைனல் மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் குறிப்பாக தன்னுடைய சொந்த ஊரான சிட்னி நகரில் 3 – 7 தேதிகளில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியுடன் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெற உள்ளதாக டேவிட் வார்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக 2022 டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா முதல் முறையாக வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பையுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை மீண்டும் உறுதி செய்த அவர் 2024 டி20 உலக கோப்பையே சர்வதேச கிரிக்கெட்டில் தாம் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சில ரன்களை அடிக்க வேண்டும். ஏற்கனவே நான் சொன்னது போல் 2024 டி20 உலக கோப்பை என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். ஏனெனில் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் தேவையான நேரத்தை செலவழிக்கும் நேரம் எனக்கு வந்து விட்டது”

இதையும் படிங்க: IPL 2023 : பும்ராவுக்கு மாற்றாக 4 ஜே வீரர்களை களமிறக்கியும் தோத்துட்டாங்க – மும்பையை கலாய்த்த முன்னாள் வீரர்

“எனவே இங்கிலாந்தில் நான் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து விளையாடுவேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெறும் அந்த தொடரில் நிச்சயம் விளையாட மாட்டேன். குறிப்பாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஆஷஸ் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடருடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார். இந்த செய்தி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருக்கும் அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement