IND vs RSA : இந்தியாவை சாய்த்து பிறந்தநாளை கொண்டாடும் டேவிட் மில்லர் – ஏபிடியை முந்திய புதிய ஆல் – டைம் சாதனை

David Miller vs IND
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பங்கேற்கும் வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியான நேற்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. இரவு 7 மணிக்கு நடைபெற்ற அந்த பரபரப்பான போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இந்தியாவைத் சொந்த மண்ணில் சாய்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் மிரட்டலாக பேட்டிங் செய்து 211/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கைக்வாட் – இஷான் கிசான் ஆகியோர் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

அதில் ருதுராஜ் 23 (18) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை விளாசி அவுட்டானர். அதை வீணடிக்காத வகையில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 29 (16) ரன்கள் விளாசிணர். இறுதியில் நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட தென்ஆப்பிரிக்கா:
அதை தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை தென்ஆப்பிரிக்கா துரத்தியதால் இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய பிரிடோரியஸ் அதிரடியாக 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 29 (13) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அடுத்த ஒருசில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் அவுட்டானதால் 81/3 என ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

அதனால் வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சமமாக மாறிய நிலையில் ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானத்தை காட்டி அதன்பின் சரவெடியாக பேட்டிங் செய்தனர். அதில் 29 (30) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை ஷ்ரேயஸ் ஐயர் கோட்டை விட்டதை பயன்படுத்திய டுஷன் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்கள் எடுத்து தோல்வியை பரிசளித்தார். மறுபுறம் அவரை விட கொஞ்சம் கூட தடுமாறாமல் பேட்டிங் செய்த டேவிட் மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

மிரட்டல் மில்லர்:
இந்த சரித்திர வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சரவெடியாக செயல்பட்ட இந்தியா பந்துவீச்சில் கடைசி 10 ஓவரில் புஸ்வானமாக மாறி படுமோசமாக பந்து வீசியதால் சொந்த மண்ணில் தலை குனியும் அளவிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வெற்றிக்கு டுஷன் 75* ரன்கள் எடுத்தாலும் கொஞ்சமும் தடுமாறாமல் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக 64* ரன்களை 206.45 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அறிமுகமான ஆரம்ப காலங்களில் இதேபோல் அதிரடியாக பேட்டிங் செய்து “கில்லர் மில்லர்” என்று ரசிகர்களிடம் பெயர் பெற்ற அவர் அதன்பின் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்யாமல் சுமாராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து பினிஷராக செயல்பட்டஅவர் முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஏபிடியை முந்தி:
இந்தியாவில் நடைபெற்ற அந்த தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் 481 ரன்களை குவித்து சூப்பரான பார்மில் இருக்கும் அவர் அதை கொஞ்சம் கூட நழுவவிடாமல் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தி தோல்வியை பரிசளித்துள்ளார். அதைவிட நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற தென் ஆப்பிரிக்க வீரர் என்ற ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. டேவிட் மில்லர் : 8* (84 இன்னிங்ஸ்)
2. ஏபி டீ வில்லியர்ஸ் : 7 (75 இன்னிங்ஸ்)

மேலும் ஜூன் 10-ஆம் தேதியான இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு அந்நாட்டு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கு இந்த வெற்றியுடன் நாமும் நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

Advertisement