- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs SA : வெறித்தனமாக போராடிய மில்லர், தோனியை மிஞ்சி 2 உலக சாதனைகள் – கேரியரில் பிரம்மாண்ட சாதனை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலே முன்னிலை பெற்றது. அதனால் வெல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலையில் அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் சுமாராக பந்து பயன்படுத்திய இந்தியா 20 ஓவர்களில் 237/3 ரன்கள் சேர்த்தது. ஆரம்பத்திலேயே 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா 43 (37) ரன்களும் கேஎல் ராகுல் 57 (28) ரன்களும் விளாசி அவுட்டானார்கள்.

அதன்பின் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்களில் அவுட்டானாலும் விராட் கோலி தனது பங்கிற்கு 49* (28) ரன்களும் தினேஷ் கார்த்திக் 17* (7) ரன்களும் குவித்து பினிஷிங் கொடுத்தனர். அதை துரத்திய தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா 0, ரோசவ் 0, மார்க்ரம் 33 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றியதால் ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

வெறித்தன போராட்டம்:
அப்போது களமிறங்கிய டேவிட் மில்லர் குயின்டன் டி காக் உடன் சேர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். நேரம் செல்லசெல்ல மிரட்டிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாக மாறி 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்கள் விளாசிய போதிலும் மறுபுறம் டீ காக் சற்று பொறுமையாக 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா போராடி 16 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது. அதனால் தப்பிய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

அபார சாதனைகள்:
ஆனால் இப்போட்டியில் சூர்யாவுக்கும் அல்லாமல் சம்பந்தமின்றி ராகுலுக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது டேவிட் மில்லருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என இந்திய ரசிகர்களே பாராட்டும் அளவுக்கு மிரட்டிய அவர் 225.53 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெறித்தனமாக வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அவரது போராட்டம் வீணடைந்த நிலையில் இப்போட்டியில் 106* ரன்களை குவித்து அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்து அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற ஜேபி டுமினியின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. டேவிட் மில்லர் : 2009*
2. குயின்டன் டீ காக் : 1964*
3. ஜேபி டுமினி : 1934
4. ஏபி டிவிலியர்ஸ் : 1672
5. டுப்லஸ்ஸிஸ் : 1466

- Advertisement -

மேலும் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ரன்களை விளாசி சதத்தை விளாசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்கள் எனப்படும் 16 – 20 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. டேவிட் மில்லர் : 857*
2. எம்எஸ் தோனி : 856
3. சோயப் மாலிக் : 745
4. நஜிபுல்லா ஜாட்ரான் : 715
5. முகமத் நபி : 677

மேலும் நேற்றைய போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கி சதமடித்த அவர் 2017இல் வங்கதேசத்துக்கு எதிராகவும் 5வது இடத்தில் களமிறங்கி சதமடித்திருந்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5வது இடத்தில் களமிறங்கி 2 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் எழுதினார்.

- Advertisement -

2017இல் நடந்த அப்போட்டியில் 35 பந்துகளில் சதமடித்த அவர் நேற்று 46 பந்துகளில் சதமடித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் (106*) பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

மேலும் டீ காக் உடன் 174* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. டேவிட் மில்லர் – டீ காக் : 174*, கௌகாத்தி, 2022*
2. பாபர் அசாம் – முஹம்மது ரிஸ்வான் : 154*, துபாய்,2021
3. ஷேன் வாட்சன் – டேவிட் வார்னர் : 133, கொழும்பு, 2012

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த தென்னாப்பிரிக்க ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். அந்தப் பட்டியல்:
1. டேவிட் மில்லர் – டீ காக் : 174*, இந்தியாவுக்கு எதிராக, 2022*
2. கிரேம் ஸ்மித் – போஸ்மன் : 170, இங்கிலாந்துக்கு எதிராக, 2009

- Advertisement -
Published by