IND vs SA : அசத்திய ஸ்கை, தெறிக்கவிட்ட மில்லர் சதத்தையும் தாண்டி இந்தியா வென்றது எப்படி? முழுவிவரம்

David Miller IND vs Sa
- Advertisement -

விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக தென்ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டு வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி அக்டோபர் 2ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் 10 ஓவர்கள் வரை பவுலர்களை பந்தாடி 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த ஓபனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் இம்முறை 203.57 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களை விளாசி அவுட்டானார். அப்படி ஓப்பனிங் ஜோடி கொடுத்த நல்ல தொடக்கத்தை கொஞ்சமும் வீணடிக்காத சூர்யகுமார் யாதவ் – விராட் கோலி ஆகியோர் அடுத்ததாக ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்கப் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் ரன் மழை பொழிந்தனர்.

- Advertisement -

அசத்திய சூர்யா:
அதில் தற்சமயத்தில் அட்டகாசமான பார்மில் இருக்கும் சூரியகுமார் வழக்கம்போல முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் விளாசி 61 (22) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் அவுட்டானார். அவருடன் விளையாடிய விராட் கோலி தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17* (7) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் செய்தார்.

அப்படி களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் இந்தியா 237/3 ரன்கள் எடுக்க தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 238 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு அர்ஷிதீப் சிங் வீசிய 2வது ஓவரில் கேப்டன் பவுமா மற்றும் ரோசவ் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 1/2 என முதல் போட்டியைப் போலவே மீண்டும் மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை அடுத்ததாக களமிறங்கி காப்பாற்ற முயன்ற ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33 (19) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 47/3 என மீண்டும் தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நின்ற தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் கைகோர்த்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் அதிரடியாக ரன்களை சேர்த்து மீட்டெடுக்க போராடினார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விடாமல் வெற்றிக்கு போராடிய இந்த ஜோடியில் ஒருபுறம் மில்லர் அதிரடியாக ரன்களை சேர்க்க மறுபுறம் டீ காக் நிதானமாக ரன்கள் சேர்த்தார்.

மிரட்டிய மில்லர்:
மறுபுறம் ஆரம்பத்தில் மிரட்டிய இந்திய பவுலர்கள் நேரம் செல்லசெல்ல இவர்களை பிரிக்க முடியாமல் திணறியதுடன் ரன்களையும் வாரி வழங்கியது. அதைப் பயன்படுத்தி அரைசதம் கடந்த இவர்கள் கடைசி நேரத்தில் அதிரடியை அதிகப்படுத்தி வெற்றியின் நெருங்கினர். அதனால் அக்சர் படேல் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது 2, 3 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்கவிட்ட மில்லர் சதமடித்து மிரட்டினார். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது.

அதில் கடைசி வரை அவுட்டாகாமல் 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்கள் எடுக்க மறுபுறம் 8 பவுண்டரி 7 சிக்ஸர்களை பறக்கவிட்ட மில்லர் 106* (47) ரன்களை குவித்து இந்தியாவை மிரட்டினார். இப்போட்டியில் டாஸ் தோற்றாலும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய இந்தியா 237 ரன்கள் என்ற பெரிய ரன்கள் எடுத்ததே இறுதியில் வெற்றியை கொடுத்தது. ஏனெனில் பந்துவீச்சில் பவர்பிளே ஓவர்களில் மிரட்டிய இந்தியா மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் விக்கெட்டுக்களை எடுக்க தடுமாறி ரன்களை வாரி வழங்கியது.

குறிப்பாக தீபக் சஹர் தவிர எஞ்சிய அனைத்து பவுலர்களும் 9க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றியை நெருங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு மில்லர் போலவே டீ காக்’கும் சற்று அதிரடியாக பேட்டிங் செய்திருந்தால் நிச்சயம் இந்தியா தோற்றிருக்கும். அதனால் பேட்டிங்கால் தப்பி 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள இந்தியாவின் பந்து வீச்சு இன்னும் படு மோசமாக உள்ளது ரசிகர்களுக்கு கவலையாக அமைந்துள்ளது.

Advertisement