இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ள இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக அப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கடைசி இன்னிங்ஸில் 371 ரன்களை துரத்தியது. அப்போது அபாரமாக விளையாடிய பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி ஆகிய ஓப்பனிங் ஜோடி 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கான அடித்தளத்தை போட்டது. அதில் பென் டக்கெட் சதத்தை அடித்து 149 ரன்களை அடித்து இந்தியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இங்கிலாந்தில் சேவாக்:
இந்நிலையில் பென் டக்கெட் இங்கிலாந்து அணிக்கு வீரேந்திர சேவாக் போல கிடைத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் பாராட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல அதிரடியாக விளையாடிய வீரேந்திர சேவாக் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2008 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 86 (76) ரன்கள் அடித்த அவர் இந்தியா 387 ரன்களை சேசிங் செய்து வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
அதுவே வரலாற்றில் இந்தியா வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச இலக்காக இன்று வரை இருந்து வருகிறது. அதே போன்ற ஸ்டைலில் விளையாடும் பென் டக்கெட் இங்கிலாந்தின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளதாக லாய்ட் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எனது முதல் ஆஷஸ் தொடரில் கூல்ட்ரிங்க்ஸ் தூக்கியது முதல் பென் டக்கெட் நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ளார்”
ஹாக்கி ஷாட்:
“தற்போது அவர் இங்கிலாந்து அணியின் வீரேந்திர சேவாக் என்ற கேள்விக்கு பதிலாக இருக்கிறார். அவர் உங்களுடைய உலக லெவன் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடக்கூடியவர். ரிவர்ஸ் ஸ்கூப் அவருக்கு இயற்கையாக வருகிறது. அதை அவர் ஜாலியாக விளையாடுகிறார். அதை விளையாடுவதற்கு அவர் எதையும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை”
இதையும் படிங்க: ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : தோனி கூட நிகழ்த்தாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் – வேறலெவல்
“ஏனெனில் பள்ளி அளவில் அவர் மிகவும் சிறந்த ஹாக்கி பிளேயராக செயல்பட்டார். அதனால் அவர் விளையாடுவது ஹாக்கி ஷாட்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது. அந்த போட்டியிலாவது இந்தியா சொதப்பாமல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.



