இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நடைபெற்று முடிந்த வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியாகியுள்ள இந்த புதிய தரவரிசை பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
டெஸ்ட் தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட் :
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் இந்திய அணி தரப்பில் பதிவான நிலையில் இந்திய வீரர்கள் பலரும் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஐசிசி தரவரிசை பட்டியலில் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் 118 ரன்களை குவித்து அசத்தினார்.
இப்படி ஒரே டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற அவர் தற்போது ஐசிசி தரவரிசை பட்டிலும் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டும் இன்றி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 800 புள்ளிகளையும் அவர் கடந்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யாரும் இதுவரை டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 800 புள்ளிகளை நெருங்காத வேளையில் முதல் இந்திய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் தோனி கூட செய்யாத இந்த சாதனையை ரிஷப் பண்ட் செய்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலு இந்த பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : இதயம் வேணாம் இதை மட்டும் செய்ங்க சிராஜ் சார்.. அவங்கள இருந்திருந்தா கில் ஜெய்ச்சுருப்பாரு.. ஃகைப் சாடல்
அவரை தவிர்த்து சுப்மன் கில் 20 வது இடத்திலும், கே.எல் ராகுல் 38-வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.



