
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் இந்திய அணி தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்தியா நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது.
ஆனாலும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் அத்தொடரில் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. எனவே அவர் இல்லாமல் இந்தியா எப்படி வெல்லப்போகிறது என்ற கவலை இங்குள்ள ரசிகர்களிடம் உள்ளது.
அதே சமயம் அர்ஷ்தீப் சிங், ஷமி போன்ற மற்ற பவுலர்களை வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த ஷமி இன்னும் பழைய ஃபார்மை எட்டவில்லை. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் எடுத்த அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
மேலும் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த அர்ஷ்தீப் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் உதவுவார் என்று நம்பலாம். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் அசத்துவதற்கு சாம்பியன்ஸ் டிராபி ஒன்னும் டி20 தொடர் அல்ல என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.
இது பற்றி டால்க்ஸ்போர்ட் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை மிஸ் செய்வீர்கள். உலகின் மிகச்சிறந்த பவுலர் உங்களுக்காக விளையாடப் போவதில்லை என்ற நிதர்சனத்தில் இருந்து உங்களால் நகர முடியாது. அவர் விளையாடாதது உங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்கும். நீங்கள் எதிரணியாக இருந்தால் அர்ஷ்தீப் சிங்கை சோதியுங்கள்”
இதையும் படிங்க: தோனி எப்போவும் தல தான்.. அப்போ போன மாசம் சொன்னது பொய்யா? ஹர்பஜனை விளாசும் ரசிகர்கள்.. காரணம் என்ன?
“கொண்டாட்டம் சிறிது நேரத்தில் முடிய இது ஒன்றும் டி20 கிடையாது. ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் வந்து பவுலிங் செய்ய வேண்டும். அந்த விஷயத்தை அவர் அதிகமாக செய்து பழக்கமில்லை. எனவே அதைப் பயன்படுத்தி நீங்கள் அவரை அடித்து நொறுக்க முயற்சிக்க வேண்டும். அப்போது அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்” எனக் கூறினார்.