இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜூலை 28ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லக்கேல் நகரில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் 10 (11) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த குசால் பெரேரா அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் நிசாங்கா 32 (54) ரன்களில் ஆட்டமிழந்தார்.
டபுள் ஹாட்ரிக் டக்:
அதைத்தொடர்ந்து வந்த கமிண்டு வெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் அமைத்து சவாலை கொடுத்தனர். அப்போது குசால் பெரேராவை 53 (34) ரன்களில் அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா அதே ஓவரில் கமிண்டு மெண்டிஸையும் 26 (23) ரன்களில் காலி செய்தார். அடுத்ததாக வந்த முன்னாள் கேப்டன் தசும் சனாகாவை டக் அவுட்டாக்கிய ரவி பிஸ்னோய் அதற்கடுத்ததாக வந்த ஹசரங்காவையும் கிளீன் போல்ட்டாக்கினார்.
அப்போது அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் அசலங்காவும் 14 ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரமேஷ் மெண்டிஸ் 12, தீக்சனா 2*, பதிரனா 1* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் இலங்கை 161/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 15 ஓவரில் சிறப்பாக விளையாடிய அந்த அணி 130/2 ரன்கள் எடுத்து அசத்தியது. ஆனால் கடைசி 5 ஓவரில் மீண்டும் அசத்திய இந்தியா மேற்கொண்டு 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்து கம்பேக் கொடுத்தது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு ரவி பிஸ்னோய் 3, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக நெதர்லாந்துக்கு எதிரான தனது கடைசி போட்டியில் டக் அவுட்டான இலங்கை வீரர் தசுன் சனாகா இத்தொடரின் முதல் போட்டியில் நேற்று டக் அவுட்டாகியிருந்தார்.
இதையும் படிங்க: 2வது போட்டியில் விளையாடாத துணை கேப்டன் சுப்மன் கில்.. விளக்கிய சூர்யகுமார்.. இந்திய பிளேயிங் லெவன்
அந்த நிலையில் இப்போட்டியிலும் டக் அவுட்டான அவர் தனது கடைசி 3 சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் டக் அவுட்டானார். இது போக ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு இதே போல அவர் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டாகியிருந்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 முறை தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான முதல் வீரர் என்ற படுமோசமான உலக சாதனையை தசுன் சனாக்கா படைத்துள்ளார்.



