ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு சுருண்டது.
குறிப்பாக 4வது ஓவரில் நிஷாங்கா 2, சமரவிக்கிரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4 கேப்டன் சனாக்கா 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை நெருப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை தலைகீழாக மாற்றினார். அதனால் 15.2 ஓவரிலேயே 50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மழை வந்துருச்சு:
அதை தொடர்ந்து 51 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 23* (18) ரன்களும் கில் 27* (19) ரன்களும் எடுத்து 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அப்படி இலங்கையை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த இந்தியா 2023 ஆசிய கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததாக டாஸ் இலங்கை கேப்டன் சனாக்கா கூறியுள்ளார்.
ஆனால் மழை வந்து பிட்ச்சை முற்றிலும் பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றியதால் தோல்வியை சந்தித்ததாக வருத்தத்துடன் தெரிவிக்கும் அவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது பின்வருமாறு. “அது முகமது சிராஜின் அபார பந்து வீச்சை காட்டியது. இது எங்களின் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பிட்ச்சாக இருக்கும் என்று நினைத்தேன்”
“இருப்பினும் மழை சூழ்நிலையை மாற்றி விளையாடிவிட்டு சென்றது. அந்த வகையில் இது எங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. நாங்கள் எங்களுடைய டெக்னிக்கை கடினமாக்கி செட்டிலாகி பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக விளையாட வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும். இதில் நல்ல பாடங்கள் கிடைத்தன. குறிப்பாக சமரவிக்ரமா, அசலங்க, குசால் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் சுழலுக்கு எதிராக அதிக ரன்கள் அடிப்பார்கள்”
இதையும் படிங்க: IND vs SL : ரொம்ப பெருமையா இருக்கு. அவரை நான் பாராட்டியே ஆகனும். அவர்தான் வெற்றிக்கு காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி
“கடினமான சூழ்நிலைகளிலிருந்து கம்பேக் கொடுப்பது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். இந்த தொடரில் நாங்கள் நல்ல அணிகளை தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தோம். கடந்த சில வருடங்களாக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றியையும் அதே சமயம் ஏமாற்றியதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.