டி20 உலகக்கோப்பையில் பும்ரா, புவியுடன் உம்ரான் மாலிக் பந்துவீச விரும்புகிறேன் – முன்னாள் இங்கி வீரர் கருத்து

Umran Malik Rahul Dravid
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியான இன்று துவங்குகிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்புகின்றனர். அந்த டி20 தொடரில் சமீப காலங்களில் அதிகமான கவனத்தையும் பாராட்டையும் பெற்ற உம்ரான் மாலிக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் வாய்ப்பு பெற்று தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசி அப்போதைய கேப்டன் விராட் கோலி உட்பட பலரின் பாராட்டுக்களை பெற்ற அவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் 4 கோடிக்கு தக்க வைத்தது. அந்த நிலைமையில் இந்த வருடம் முழுமையான வாய்ப்பைப் பெற்ற அவர் 14 போட்டிகளில் 22 விக்கட்டுகளை வீழ்த்தி நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார். குறிப்பாக இந்த வருடம் வேகத்தை அதிகப்படுத்திய அவர் 150 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்கவிட்டார்.

- Advertisement -

விவேகமற்ற வேகம்:
அதிலும் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை உலகையே திரும்பிப் பார்க்கும் வயதில் படைத்து 22 வயதிலேயே பல ஜாம்பவான்களின் பாராட்டுக்களை அள்ளினார். இந்திய ஆடுகளங்களிலேயே இப்படி மிரட்டுகிறார் என்றால் வேகத்துக்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்ற கோணத்தில் அவரை நேரடியாக உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யுமாறு சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

இருப்பினும் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்கிய அவர் 9.03 என்ற எக்கனாமியில் பந்து வீசியதால் 2 – 3 வருடங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாமல் அவசரப்பட்டு தேர்வு செய்ய வேண்டாம் என்று ஜாம்பவான் கபில் தேவ் எச்சரித்தார். ஆனால் இந்திய அணியில் இவ்வளவு வேகத்தில் பந்து வீசக்கூடியவர் இல்லை என்பதால் தென் ஆப்ரிக்க தொடரில் அவரை தேர்வுக்குழு தேர்வு செய்தாலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.

- Advertisement -

ஆனாலும் அயர்லாந்து டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா – விவிஎஸ் லக்ஷ்மன் கூட்டணி அவருக்கு வாய்ப்பளித்தது. அதில் ரன்களை வாரி வழங்கிய அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கினார். அதனால் வேகத்துடன் லைன், லென்த் போன்ற அம்சங்களை கற்காமல் எந்த பயனுமில்லை என்று கருதிய தேர்வுக்குழு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக நீக்கியது.

உலகக்கோப்பையில் உம்ரான்:
இதனால் டி20 உலகக் கோப்பையிலும் அவர் தேர்வாவதற்கான வாய்ப்புகளும் முடிந்து போனதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் 3-வது பந்துவீச்சாளர் இடத்துக்கு முகமது சமி, முஹம்மது சிராஜ் மற்றும் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி போட்டி போடுகின்றனர். இந்நிலையில் பும்ரா, புவி ஆகியோருடன் டி20 உலக கோப்பையில் உம்ரான் மாலிக் விளையாட விரும்புவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேரன் கௌக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை தங்கமாக நீங்கள் முதலாவதாக தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் புதிய பந்தில் அசத்தக்கூடிய திறமை பெற்றுள்ள புவனேஸ்வர் ஆரம்பக் கட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பார் என்பதால் நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும். அதை இங்கிலாந்து டி20 தொடரிலும் நாம் பார்த்தோம். அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசியது என்னை கவர்ந்தது”

“இருப்பினும் உம்ரான் மாலிக் உங்களிடம் இருக்கிறார். அவரை போன்ற அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடியவர் எனது அணியில் நிச்சயம் இருப்பார். ஏனெனில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் எதிரணிக்கு ஆச்சர்யமளித்து அதிர்ச்சியளிக்கும் மிரட்டல் வேகத்தில் பந்துவீசும் ஒருவர் உங்களுக்கு தேவை.

இதையும் படிங்க : இது 3வது முறை – இங்கிலாந்தில் சுனில் கவாஸ்கருக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கெளரவம், இந்தியாவுக்கு பெருமை

ஆனால் இந்திய அணியில் முகமது சமியும் புதிய பந்தில் சிறப்பாக விக்கெட்டுகள் எடுக்கும் திறமை பெற்றுள்ளதால் தேர்வு செய்ய நிறைய வீரர்கள் உள்ளனர். பிரசித் கிருஷ்ணா போன்றவரையும் விட முடியாது. ஆனால் பும்ரா, புவனேஸ்வர், சிராஜ் ஆகியோருடன் உம்ரான் மாலிக் விளையாட நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement