இது அண்டர்-18 கேப்டனுக்கு கூட தெரியும், ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய கேப்டன்ஷிப் தவறை உடைக்கும் டேனிஷ் கனேரியா

Danish-Kaneria-and-Rohit
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தலை குனிந்துள்ளது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் டாக்கா நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் தரமாக பந்து வீசிய வங்கதேசத்திடம் 41.2 ஓவரிலேயே பெட்டி பாம்பாக அடங்கிய இந்தியா 186 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட் எடுத்தார்.

IND vs BAn

- Advertisement -

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 136/9 என தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்ற மெஹதி ஹசன் யாருமே எதிர்பாராத வகையில் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி 38* (39) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு காலத்திற்கு மறக்க முடியாத ஒரு தோல்வியை பரிசளித்தார். இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியும் பந்து வீச்சில் போராடி 9 விக்கெட்டுகளை எடுத்ததும் வெற்றி கிடைத்து விட்டதாக எண்ணி இந்திய அணியினர் அனைவருமே கடைசி 6 ஓவரில் அஜாக்கிரதையாக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது.

கேப்டன்ஷிப் சொதப்பல்:

அதனால் வெறும் 187 ரன்களை துரத்துவதற்கு வழக்கம் போல திண்டாடிய வங்கதேசம் இந்திய அணியினரின் அஜாக்கிரதையை பயன்படுத்தி அபார வெற்றி பெற்றது. போதாக்குறைக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் இப்போட்டியில் தாறுமாறாக இருந்தது என்றே கூறலாம். ஏனெனில் கடைசி 6 ஓவரில் கத்துக்குட்டி வங்கதேசத்தின் டெயில் எண்டர்கள் அமைத்த 51 ரன்கள் வெற்றி பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது.

Rohit-and-Sundar

குறிப்பாக போட்டி நடைபெற்ற டாக்கா மைதானத்தில் சுழல் பந்து வீச்சு நன்றாக எடுபட்ட நிலையில் சாகிப் அல் ஹசன் 5 விக்கெட் எடுத்தது போலவே இந்திய அணியின் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் 17 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை 3.40 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்தார். ஆனால் அவருக்கு 5 ஓவர்கள் மட்டுமே வாய்ப்பு வழங்கிய கேப்டன் ரோகித் சர்மா டெத் ஓவர்களில் நம்பிக்கை இழந்து ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை.

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட்டிலேயே முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் வெற்றிகரமாக பந்து வீசும் திறமை பெற்றவராக அறியப்படும் சுந்தருக்கு டெத் ஓவர்களில் பந்து வீச வாய்ப்பு வழங்காதது ஏன் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக 10* (11) ரன்கள் எடுத்த முஸ்தஃபிசுர் ரஹீம் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில் ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கட்டை எடுப்பார் என்று அண்டர்-19 அளவில் செயல்படும் கேப்டன்களுக்கு கூட தெரியும் எனக்கூறும் கனேரியா ரோகித் சர்மாவின் கேப்டன்சிப் பற்றி அதிருப்தியுடன் பேசியது பின்வருமாறு.

Danish Kaneria INDia

“சுந்தரிடம் 5 ஓவர்கள் மீதருந்தது. மறுபுறம் முஸ்தஃபிஷர் ரகுமான் ஒரு இடது கை பேட்ஸ்மேன். அந்த இடத்தில் ஒரு இடது கை டெயில் எண்டர் பேட்ஸ்மேனுக்கு ஆஃப் ஸ்பின்னர் பந்து வீசினால் விக்கெட்டை எடுப்பார் என்பது அண்டர்-16, அண்டர்-18 அளவில் விளையாடும் வீரர்களுக்குக் கூட தெரியும். அந்த சமயத்தில் சுந்தர் வாய்ப்பு பெற்றிருந்தால் நிச்சயமாக பந்தை சுழற்றியிருப்பார். ஆனால் அவர் பந்து வீசுவதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை. அந்த வகையில் ஒரு மோசமான பதற்றமான செயல்பாடுகளை இந்தியா வெளிப்படுத்தியது”

“இந்த நேரத்தில் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்காக அனைவரும் தயாராகி வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நிறைய கேள்விக்குறிகள் உள்ளன. ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் இடங்களில் யார் தொடர்ச்சியாக களமிறங்கப் போகிறார்கள்? எந்தெந்த நேரங்களில் எந்த பவுலர்கள் பந்து வீசப் போகிறார்கள்? என்பது போன்ற நிறைய பேச்சுக்கள் இந்திய அணியில் காணப்படுகிறது. ஆனால் இப்போட்டியில் எந்த திட்டத்தையுமே இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தவில்லை” என்று கூறினார்.

Advertisement