இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதல் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள வேலையில் அதில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகள் என இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
எங்களுடைய ஸ்டைலை மாற்றப்போவதில்லை : டேனியல் வெட்டோரி
இந்த தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது பேட்டிங்கில் 286 ரன்கள் குவித்து அசத்தியதால் முதல் வெற்றியை பெற்றிருந்தது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாகவே அந்த அணி தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக அதிரடியாக விளையாட முயற்சித்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்ததால் அந்த இரண்டு தோல்விகளும் ஏற்பட்டது. இதனால் சன் ரைசர்ஸ் அணி இனிமேல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பலரது மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் சன்ரைசர்ஸ் அணி தற்போது விளையாடி வரும் இந்த ஆக்ரோஷமான ஆட்டத்தை எந்த காரணத்திற்காகவும் கைவிடாது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் எங்களுடைய ஸ்டைலை மாற்ற வேண்டும் என்பது குறித்து எப்போதும் பேசியது கிடையாது. நாங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடுவதையே விரும்புகிறோம்.
இந்த பாணியில் இருந்து நாங்கள் மாறப்போவதில்லை. முதல் மூன்று போட்டிகளை பார்க்கும் போது எங்களது ஆட்டம் உங்களுக்கு புரிந்திருக்கும். அதிரடியாக விளையாடும் போது ஒருசில முறை அது பின்னடைவைத் தரலாம். ஆனால் அது எங்களுக்கு பாதகமாக அமையும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் நாங்கள் இதே போன்ற அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்துவோம்.
இதையும் படிங்க : கப் முக்கியம் இல்ல கண்ணா.. உண்மையான பேன்ஸ் தான் முக்கியம்.. சி.எஸ்.கே வை பின்னுக்கு தள்ளி – ஆர்.சி.பி மெகா சாதனை
இந்த சீசனின் துவக்கத்திலேயே இரண்டு தோல்விகள் அடைந்ததால் எங்களால் மீண்டு வரமுடியாது என்றெல்லாம் எதுவும் கிடையாது. நிச்சயம் நாங்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பான அதிரடியான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம் என டேனியல் வெட்டோரி கூறியது குறிப்பிடத்தக்கது.



