இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அப்படி நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகளும் பங்கேற்று தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியது.
நடராஜனை வாங்காமல் விட்டது ஏன்? :
அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய சன் ரைசர்ஸ் அணியானது சில முக்கிய வீரர்களை விலைக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை அவர்கள் வாங்காமல் விட்டனர்.
இப்படி சிறப்பாக செயல்படும் நடராஜனை அவர்கள் வாங்காமல் விட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும் நடராஜன் பத்து கோடிக்கு மேல் டெல்லி அணியால் வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை வாங்க முடியாதது குறித்து பேசியுள்ள சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில் :
நடராஜனை வாங்காமல் விட்டது நிச்சயம் எங்களுக்கு இழப்புதான். அவரைப் போன்று ஒரு வீரரின் இடத்தை நிரப்புவது கடினம் இருந்தாலும் ஏலத்தின் முதல் பாதியிலேயே முகமது ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற வீரர்களின் பெயர்கள் வந்தபோது அவர்களை வாங்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். அதன் காரணமாக அவர்களை வாங்கினோம்.
அதோடு அவர்களுக்கான விலையும் குறைவு என்பதனாலேயே அதனை கருத்தில் கொண்டு அந்த முடிவுகளை எடுத்தோம். பின்னர் பின் பாதியில் நடராஜனுக்கு செல்லும் முன்னர் பல்வேறு நிலைமைகளை யோசிக்க வேண்டிய உள்ளது. இந்த இடத்தில் கையிருப்பு பணம் முக்கியம் என்பதனாலும் மேலும் ஒரு சில காரணங்களாலும் எங்களால் நடராஜனை வாங்க முடியாமல் போனது என்று அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025: அஸ்வின், கான்வே உட்பட ஏலத்தில் வாங்கப்பட்ட புதிய தரமான சிஎஸ்கே அணி இதோ
கடந்த சில ஆண்டுகளாகவே புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேலையில் அவர்கள் இருவரையும் விடுத்து தற்போது அந்த அணி புதிய பந்துவீச்சாளர்களுடன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



