ஆசிய கோப்பை 2022 : நாங்க ஜெயிக்க காரணமே சிஎஸ்கே தான் – வெற்றிக்குப்பின் கேப்டன் சனாகா பேசியது இதோ

Asia Cup Dhasun Shanaka Sri Lanka
Advertisement

வரலாற்றில் 15 வது முறையாக ஐக்கிய நாடுகளில் நடைபெற்று வந்த 2022 ஆசிய கோப்பை தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மாபெரும் இறுதி போட்டியில் மோதின. செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 170/6 ரன்கள் சேர்த்தது. நிஷாங்கா 8, குசால் மெண்டிஸ் 0, கேப்டன் சனாக்கா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் ஆரம்பத்திலேயே அந்த அணி 58/5 என திண்டாடியது.

SL vs PAK

அதனால் 100 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஹசரங்கா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (21) ரன்களில் அவுட்டானாலும் அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த ராஜபக்சா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (45) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 22/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய இப்திகர் அஹமத் 32 (31) ரன்களில் போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இலங்கை அபாரம்:
அவருடன் முடிந்த வரை போராடிய தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 55 (49) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் இலங்கையின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டும் ஹசரங்கா 3 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2022 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

SriLanka Asia Cup 2022

இத்தனைக்கும் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளால் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இளம் வீரர்களை வைத்து முக்கிய போட்டிகளில் தைரியத்துடன் விளையாடி 6ஆவது ஆசிய கோப்பையை வென்றுள்ளது அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் முதல் 10 ஓவர்களில் இலங்கையை 58/5 என சுருட்டிய பாகிஸ்தான் அதன்பின் ரன்களை வாரி வழங்கி பேட்டிங்கிலும் ரன்கள் எடுக்க தவறி வெறும் கையுடன் நாடு திரும்பியது.

- Advertisement -

சிஎஸ்கே உத்வேகம்:
ஏனெனில் இப்போட்டி நடைபெற்ற துபாய் மைதானத்தில் கடந்த பல வருடங்களாகவே இரவு நேரங்களில் நடைபெறும் டி20 போட்டிகளில் டாஸ் வென்று சேசிங் செய்தால் வெற்றி உறுதி என்பது உலகிற்கே தெரிந்த கதையாகும். இந்த தொடரில் கூட மொத்தமாக நடைபெற்ற 13 போட்டிகளில் 10+ போட்டிகளில் சேசிங் செய்த அணிகளே வென்றன.

csk 1 IPL

ஆனாலும் துபாயில் டாஸ் என்பதற்கு விதி விலக்காக கடந்த 2021இல் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் தோற்றும் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தாவை தோற்கடித்து 4வது கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த பைனலில் வெல்வதற்கு தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததாக இலங்கை கேப்டன் தசுன் சானக்கா வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டி முடிந்ததும் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு முழுமையாக ஆதரவு கொடுத்த மைதானத்தில் இந்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அவர்களை நாங்கள் பெருமைப்பட வைத்துள்ளோம் என்று நம்புகிறேன். 2021 ஐபிஎல் தொடரில் இங்கே முதலில் பேட்டிங் செய்த சென்னை கோப்பையை வென்றது என்னுடைய மனதில் இருந்தது. அதை பார்த்து எங்களுடைய இளம் வீரர்கள் இந்த சூழ்நிலைகளை புரிந்து தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக 5 விக்கெட்டுகளை இழந்த பின்பு ஹசரங்கா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்”

PAKvsSL

இதையும் படிங்க: உலகமே அழிந்தாலும் இது மாறாது, வித்யாசமாக காயமடைந்த பாக் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள் வீடியோ உள்ளே

“அதிலும் எங்களது இன்னிங்சில் கடைசி பந்தில் சிக்ஸர் பறந்தது திருப்பு முனையாக அமைந்தது. 160 ரன்கள் இலக்கு துரத்த கூடியது என்பதால் 170 என்பது மனதளவில் தைரியத்தை கொடுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்ற பின் நாங்கள் தீவிரமாக விவாதித்தோம். எங்களது அணியில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது. லீக் சுற்றில் சில தவறுகள் செய்தாலும் இன்று நாங்கள் 100% சிறப்பாக செயல்பட்டோம். மேலும் பயிற்சியாளர்கள், இலங்கை வாரியம் மற்றும் தேர்வுக்குழுவுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement