IPL 2023 : விராட், ரோஹித்தை டீமை ஓடவிட்ட மாதிரி தோனியையும் – சுப்மன் கில் தெறிக்க விடுவாரு, சிஎஸ்கே’வை எச்சரித்த முன்னாள் வீரர்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதியான இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய முன்னாள் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஏற்கனவே 4 கோப்பைகளை வென்று வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலில் விளையாடும் அனுபவமிக்க சென்னைக்கு மகத்தான தோனி கேப்டன்ஷிப் செய்து 5வது கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

மறுபுறம் தோற்றுவிக்கப்பட்ட 2 வருடங்களிலும் பாண்டியா தலைமையில் சொல்லி அடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் கடந்த ஃபைனலில் கோப்பையை வென்ற தங்களுடைய கோட்டையான அதே அகமதாபாத் மைதானத்தில் இம்முறை சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த 2 அணிகளை ஒப்பிடும் போது குஜராத் அணியில் ஷமி, மோஹித் சர்மா, ரசித் கான் என 3 தரமான பவுலர்கள் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடத்தை பிடித்து சென்னைக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுக்க காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அடுத்த டார்கெட் தோனி:
அதை விட பேட்டிங் துறையில் 851* ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ள சுப்மன் கில் ஏற்கனவே இந்த சீசனில் 3 சதங்களை அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக சர்வதேச அளவில் சமீப காலங்களில் ரன் மெஷினாக செயல்படும் அவர் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 2 ஐபிஎல் போட்டிகளிலும் அடுத்தடுத்த சதங்களை அடித்து வெறித்தனமான ஃபார்மில் இருக்கிறார். அதனால் அவரைத் தாண்டாமல் சென்னையால் கோப்பையில் கை வைக்க முடியாது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவின் ஜாம்பவான்கள் விராட் கோலியின் பெங்களூரு மற்றும் ரோகித் சர்மாவின் மும்பை வீட்டுக்கு கிளம்ப முக்கிய காரணமாக அமைந்த சுப்மன் கில் இந்த ஃபைனலில் மற்றொரு ஜாம்பவானான தோனி தலைமையிலான சென்னையையும் வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். அதாவது இத்தொடரில் குஜராத் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கடைசி அணியை தீர்மானிக்கும் 70வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலியின் சதமடித்த உதவியுடன் 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

ஆனால் அந்த இலக்கை கொஞ்சம் கூட கருணை காட்டாமல் சதமடித்து எட்டிய சுப்மன் கில் பெங்களூரு வெளியேற முக்கிய காரணமாக அமைந்தார். மறுபுறம் மும்பை 4வது அணியாக தகுதி பெற உதவினாலும் குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் சதமடித்து அவர் ரோகித் சர்மா தலைமையில் 6வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை உடைத்தார். அந்த வகையில் அடுத்ததாக தோனியை அவர் தெறிக்க விடுவார் என்று தெரிவிக்கும் அதுல் வாசன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“தற்போது பேட்டிங் செய்யும் விதத்தில் சுப்மன் கில் அந்த 3 புகழ்பெற்றவரையும் (விராட், ரோஹித், தோனி) விழுங்குவார் என்று நினைக்கிறேன். அந்த வரிசையில் அடுத்ததாக மஹி இருக்கிறார் என கருதுகிறேன். குஜராத் அணியும் சிறப்பாகவே இருக்கிறது. மும்பையின் வெற்றி சூரியகுமார் அவுட்டானதும் பறிபோனது. ஆனால் குஜராத்திடம் பேட்டிங், பவுலிங் வரிசை ஆழமாக இருக்கிறது. அதனால் புதிய அணியாக இருந்தாலும் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். சென்னையும் மகத்தான அணி என்றாலும் சுப்மன் கில் களத்தில் இடைவெளிகளை பார்த்து அடிக்கும் வீரராக உள்ளார்”

“ஐபிஎல் பணம் மற்றும் புகழால் நிறைய வீரர்கள் தங்களுடைய கவனத்தை இழப்பார்கள். ஆனால் கில் தொடர்ந்து அமைதியாக கவனத்துடன் இருக்கிறார். பஞ்சாப்பின் சிறிய ஊரிலிருந்து வந்த அவரை அவருடைய தந்தை கிரிக்கெட்டுக்குள் போராடிக் கொண்டு வந்துள்ளார். அவருடன் அவருடைய தந்தை எப்போதும் பயிற்சியாளராக இருக்கிறார். அதனால் தற்போது கிடைத்துள்ள பணம் மற்றும் புகழைத் தாண்டியும் அவர் பழைய வீரராகவே இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement