
இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். மேலும் தொடர்ந்து இந்திய நிர்வாகமும் அவருக்கு வாய்ப்பினை மறுத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதால் அவர் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பல முன்னாள் வீரர்களும் தோனியின் ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டது எனவே அவர் விரைவில் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார். மேலும் இந்த வருடம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்து இந்திய t20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற இருந்த தோனியின் கனவு தற்போது காணாமல் போயுள்ளது.
மேலும் இந்த ஐபிஎல் தொடருக்காக மார்ச் மாதம் இரண்டாம் தேதி சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய தோனி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சியில் உள்ளார். இந்நிலையில் இந்த வருட பயிற்சியில் தோனியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் பயிற்சியாளர் பாலாஜி கூறுகையில் :
தோனி ஆறு மாதங்கள் விளையாடவில்லை என்பது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஒரு பெரிய விஷயமில்லை. டைகர் வுட்ஸ் (பிரபல கோல்ப் வீரர்), ரோஜர் ஃபெடரர் (பிரபல டென்னிஸ் வீரர்) ஆகியோரை நீங்கள் பார்த்தால் அது தெரியும். அவர்கள் நீண்ட தொடர்களில் விளையாடாமல் இருந்தும் மீண்டும் ஒரு தொடரில் விளையாடும் போது பார்மிற்கு வந்துள்ளனர்.
எனவே இடைவெளி என்பது ஒரு பொருட்டே கிடையாது. அவர்களின் திறமையும் அது மாற்றி விடாது இதேபோன்றுதான் தோனிக்கும் தற்போது நிலை உள்ளது. தோனி இந்த வருட பயிற்சி எடுக்கும்போது நான் பார்த்தேன். அவர் கொஞ்சம் கூட சளித்து போகவில்லை. அப்படி இருப்பது மிகவும் பிரமாதம் ஆனது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் டி20 உலகக் கோப்பை நடைபெறும் பட்சத்தில் அவர் நேரடியாக அணிக்கு தேர்வாக முடியும் என்று சில முன்னாள் வீரர்களும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.