உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அதனால் 13 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது.
மே 12ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியின் முடிவில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. ஏனெனில் அதுவே சென்னை அணி இந்த வருடம் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி லீக் போட்டியாகும். வழக்கம் போல இந்த வருடமும் ஆரம்பம் முதலே சென்னை அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோகமான ஆதரவையும் வரவேற்பையும் கொடுத்தனர்.
ரசிகர்களுக்கு நன்றி:
குறிப்பாக தங்களுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கிய போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் வெறித்தனமான ஆதரவு கொடுத்தனர். எனவே அப்போட்டி முடிந்ததும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக தோனி உள்ளிட்ட அனைத்து சிஎஸ்கே வீரர்களுக்கும் 50 என்று பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் விருதையும் சென்னை நிர்வாகம் அணிவித்து கௌரவித்தது.
அதாவது ராஜஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியை சேர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை 50 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதன் வாயிலாக மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு பின் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 50 வெற்றிகள் பதிவு செய்த 3வது அணியாகவும் சென்னை சாதனை படைத்தது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே சிஎஸ்கே ரசிகர்களுக்கு அந்த மெடல் வழங்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட சிஎஸ்கே வீரர்கள் அப்படியே மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக முன்னாள் கேப்டன் தோனி டென்னிஸ் பந்துகளை பேட்டில் அடித்து ரசிகர்களுக்கு பரிசாக அனுப்பினார். அப்போது அங்கே வந்த சுரேஷ் ரெய்னாவை கட்டிப்பிடித்த தோனி அவருக்கும் ஒரு பந்தை பரிசாக வழங்கி நட்பை வெளிப்படுத்தினார். மேலும் சிஎஸ்கே அணியின் ஜெர்ஸி, தொப்பி மற்றும் சில உபகரணங்களை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்த கேப்டன் ருதுராஜ் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பவர்பிளேவின் போதே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சி.. சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்வி குறித்து – சஞ்சு சாம்சன் வருத்தம்
இதைத் தொடர்ந்து சென்னை அணி தங்களுடைய கடைசிப் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. அதில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் சென்னை இருக்கிறது. பெங்களூரு அணியும் அதே நிலைமையில் இருப்பதால் அப்போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



