சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது நான்காவது தோல்வியை பதிவு செய்தது.
இருப்பினும் தற்போதைய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவர்கள் தோல்வியை தழுவியது அந்த அணியின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் :
பவர்பிளேவின் போது மைதானம் சற்று இருதன்மை உடையதாகவும், ஸ்லோவாகவும் இருந்ததாக தகவல் வந்தது. எனவே நாங்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 170 ரன்கள் வரை செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். சிமர்ஜீத் சிங் சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவு தான்.
இதையும் படிங்க : பவர்பிளேவிற்கு அப்புறம் கொஞ்சம் லூசா விட்டுட்டோம்.. ராஜஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்
ஆனால் மைதானத்தின் தன்மையை கணித்து எங்களால் அதற்கேற்றார் போன்று விளையாட முடியவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்த தோல்வி இனிவரும் போட்டிகளில் நடைபெறாமல் இருக்க சரியான இடங்களில் நாங்கள் எங்களது உழைப்பை அதிகரிக்க இருக்கிறோம் என்றும் சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.