ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பை அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 155-9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூரியகுமார் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர்.
சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது 4, கலீல் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் திரிபாதி 2, துபே 9, தீபக் ஹூடா 3, சாம் கரண் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
சென்னை வெற்றி:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 65* (45) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். கூடவே ஜடேஜா 17 ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரில் 158-6 ரன்கள் எடுத்த சென்னை போராடி தங்களது முதல் வெற்றியைப் பெற்று தொடரை வெற்றிகரமாக துவங்கியது மும்பைக்கு அதிகபட்சமாக விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணித்து ஏலத்திலேயே ஜடேஜா, அஸ்வின், நூர் அஹ்மத் ஆகியோரை வாங்கி வெற்றிக்கான திட்டங்களை சரியாக அமைத்ததாக கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி”
சென்னையின் திட்டம்:
“இந்த வெற்றி இன்னும் கொஞ்சம் எளிதாக தெளிவாக இருந்திருப்பதை விரும்புகிறேன். ஆனால் விளையாட்டு இப்படி தான் செல்லும். என்னுடைய அணிக்காக தேவைப்படுவதால் நான் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறேன். அணியில் அதிக சமநிலையை ஏற்படுத்துவதால் எனது இடத்தை நான் மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொண்டுள்ளேன்”
இதையும் படிங்க: 65 ரன்ஸ்.. 13க்கு 0.. ரச்சின், ருதுராஜ் அதிரடியில் வென்ற சிஎஸ்கே.. 13வது வருடமாக மும்பை பரிதாப தோல்வி
“ஏலம் முடிந்ததிலிருந்தே எங்களுடைய ஸ்பின்னர்ஸ் சரியான புள்ளியில் இருக்கிறார்கள். சேப்பாக்கத்தில் அந்த 3 ஸ்பின்னருகளும் இணைந்து பௌலிங் செய்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. கலீல் அகமது அனுபவம் கொண்டவர். நூர் துருப்புச்சீட்டு. அதனாலேயே நாங்கள் அவரை அணியில் இருப்பதை விரும்பினோம். அஸ்வின் இருப்பதையும் விரும்புகிறோம். (0.12 நொடியில் ஸ்டம்ப் செய்த தோனி பற்றி) கடந்த வருடத்தை விட இந்த வருடம் தோனி ஃபிட்டாக மிகவும் இளமையாக இருக்கிறார்” என்று கூறினார்



