ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் வெற்றிகரமான சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மாவை டக் அவுட்டாக்கிய கலீல் அகமது மறுபுறம் தடுமாறிய ரியான் ரிக்கல்டனை 13 ரன்களில் காலி செய்தார். அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் 11 ரன்னில் அஸ்வின் சுழலில் அவுட்டானதால் 36-3 என மும்பை ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 29 ரன்னில் தோனியின் அற்புதமான ஸ்டம்பிங்கில் வெளியேறினார்.
சென்னை அசத்தல்:
அவரை அவுட்டாக்கிய நூர் அகமது அடுத்ததாக வந்த ராபின் மின்ஸை 3 ரன்னில் அவுட்டாக்கி மறுபுறம் நங்கூரமாக விளையாடிய திலக் வர்மாவையும் 31 ரன்னில் அவுட்டாக்கினார். இறுதியில் மிட்சேல் சான்ட்னர் 11, நமன் திர் 17, தீபக் சஹர் அதிரடியாக 28* (15) ரன்கள் எடுத்தனர். அதனால் 10 ஓவரில் மும்பை 155-9 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அஹ்மத் 3, நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தனார்கள்.
அடுத்ததாக களம் இறங்கிய சென்னைக்கு ராகுல் திரிபாதி 2 ரன்னில் தீபக் சஹர் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் ரச்சின் ரவிந்த்ரா நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அரை சதத்தை அடித்து 53 (26) ரன்கள் எடுத்த போது விக்னேஷ் சுழலில் சிக்கினார்.
போராடி வெற்றி:
அடுத்ததாக வந்த சிவம் துபே 9, தீபக் ஹூடா 3 ரன்களில் விக்னேஷ் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ஷாம் கரன் 4 ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரவீந்திர ஜடேஜா 17 (18) ரன்கள் அடித்து தனது அனுபவத்தை காட்டி ரன் அவுட்டானார்.
இதையும் படிங்க: 155 ரன்ஸ்.. 43 வயதில் வெறும் 0.12 நொடியில் மின்னல் வேகத்தில் மிரட்டிய தல தோனி.. மும்பைக்கு எதிராக நூர் சாதனை
இறுதியில் நங்கூரமாக விளையாடி வந்த ரவீந்திரா அரை சதத்தை அடித்து 65* (45) ரன்கள் விளாசி சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.1 ஓவரில் 158-6 ரன்கள் எடுத்த சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை வெற்றிகரமாக துவக்கியது. மறுபுறம் மும்பைக்கு அதிகபட்சமாக விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து 2013 முதல் தொடர்ந்து 13வது வருடமாக ஐபிஎல் தொடரில் தங்களது முதல் போட்டியில் 13வது தோல்வியை மும்பை பரிதாபத் தோல்வியை சந்தித்துள்ளது.



