என்ன சொல்றிங்க ! 175 கி.மீ வேகம் வீசக்கூடிய ஜூனியர் மலிங்காவா, சென்னையின் மாஸ்டர் பிளான் இதோ

Matheesa Pathirana
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து பல எதிர்பாராத திரில்லர் தருணங்களுடன் விறுவிறுப்பாக மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. ஆனால் வெற்றிகரமான அணிகள் என பெயரெடுத்த மும்பைக்கும் சென்னைக்கும் மட்டும் இந்த தொடர் இதுவரை வெற்றிகரமாக அமையவில்லை. அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது.

CSK

- Advertisement -

அந்த வேளையில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி பொன்னான 2 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த அணி ரசிகர்கள் இனிமேல் தங்களது அணி வெற்றிப் பாதையில் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் குஜராத்துக்கு எதிரான 6-ஆவது போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தனக்குத்தானே கேள்விக்குறியாக்கியுள்ளது.

காயங்களும் சோதனைகளும்:
இந்த தொடருக்கான ஏலத்தில் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவழித்து மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து சென்னை அணி நிர்வாகம் வாங்கிய தீபக் சாஹர் ஆரம்பத்திலேயே காயம் காரணமாக வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை இப்போதும் கொடுத்து வருகிறது. அவரைப் போன்ற ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறும் சென்னை அணிக்கு போனது போகட்டும் இதர வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் கை கொடுப்பார்களா என்று பார்த்தால் அவர்கள் அதற்கு மேல் உள்ளனர்.

ஏனெனில் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களில் அந்த அணி பெரிதும் நம்பியிருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த ஆடம் மில்னே எதிர்பாராத வண்ணம் முதல் போட்டிக்கு பின் காயமடைந்தார். அதன்பின் விளையாடிய இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் வள்ளல் பரம்பரையாக ரன்களை வாரி வழங்கி கையிலிருந்த வெற்றியைக் கூட எதிரணிக்கு பரிசளித்தார். தற்போதைய நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்வைன் பிராவோ மட்டுமே சென்னை அணிக்கு ஆறுதலாக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆடம் மில்னே விலகல்:
இந்த நிலையில் ஐபிஎல் 2022 தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னே விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மதீஷா பதிரனா எனும் இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்க படுவதாகவும் அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஏற்கனவே காயமடைந்த தீபக் சஹருக்கு பதில் எந்த ஒரு மாற்று வீரரையும் அந்த அணி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இந்த நிலைமையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மதீஷா பதிரனா வெறும் 20 லட்சம் என்ற குறைந்த விலையில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2020, 2021 ஆகிய ஐபிஎல் தொடர்களில் சென்னை அணியின் ரிசர்வ் வீரராக இருந்து வந்தார்.

- Advertisement -

ஜூனியர் மலிங்கா:
ஏறக்குறைய இலங்கையை சேர்ந்த யார்கர் கிங் மற்றும் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சன் முறையில் பந்து வீசும் இவரை இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களில் ஜூனியர் மலிங்கா என்று அழைக்கின்றனர். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை வெஸ்ட் இண்டீசில் நடந்த 2022 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை என 2 அடுத்தடுத்த ஜூனியர் உலகக் கோப்பைகளில் இலங்கை அணியில் இடம் பிடித்திருந்தார்.

மலிங்காவை போலவே அதிவேகமான பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடிய வல்லமை பெற்றுள்ள இவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அண்டர்-19 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை 6.16 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து மிரட்டினார். குறிப்பாக கடந்த 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எதிராக 175 கி.மீ வேகப்பந்தை இவர் வீசியதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

இதையும் படிங்க : விராட் கோலி மட்டுமே பார்ம் அவுட், ரோஹித் சர்மா இல்ல – உருட்டும் முன்னாள் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

இருப்பினும் அது ஒருசில தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட தவறு என தெரிய வந்தாலும் அந்தத் தருணத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த அவர் தற்போது சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மொத்தத்தில் லசித் மலிங்காவை போல நல்ல வேகத்திலும் யார்கர் பந்துகளை வீசும் திறமை பெற்றுள்ள இளம் பந்துவீச்சாளரை சென்னை வாங்கியுள்ளது அந்த அணி ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisement