ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளால் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தவற விட்டதால் அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை சிஎஸ்கே இப்போதே துவங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே சாய்க் ரசீத், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்பளித்து வருகிறது. அதில் ஆயுஷ் கடந்தப் போட்டியில் 94 (48) ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதனால் அவர் வருங்காலத்தில் அசத்தப் போகும் சிஎஸ்கே அணிக்கு தரமான இளம் வீரராக கிடைத்துள்ளதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்தார்.
உலக சாதனை வீரர்:
இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து இளம் வீரர் வன்ஸ் பேடி காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் 26 வயது இளம் வீரர் உர்வில் பட்டேல் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப வருடங்களாகவே உள்ளூரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனாலேயே அவரை 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
இருப்பினும் கடந்த வருடம் மெகா ஏலத்தில் குஜராத் கழற்றி விட்ட அவரை சிஎஸ்கே உட்பட எந்த அணியும் வாங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் 2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் திரிபுராவுக்கு எதிராக 28 பந்துகளில் அவர் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
போடு சக்க:
மேலும் 7 பவுண்டரி 12 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 113 (35) ரன்களை விளாசி குஜராத் 156 ரன்கள் இலக்கை 10.2 ஓவரில் எட்டுவதற்கு உதவினார். அத்தோடு நிற்காத அவர் அதே தொடரில் உத்தரகாண்டிற்கு எதிராக மீண்டும் 36 பந்துகளில் சதம் அடித்து சத்தினார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த டாப் 5 இந்திய வீரர்களில் அவருடைய பெயர் 2 முறை இருக்கிறது.
இதையும் படிங்க: எப்போவும் ஜெய்க்க முடியாது.. அவங்க பெயரை பாத்து பயந்தா முடிஞ்ச்சு.. சச்சினின் 2013 அட்வைஸ் பற்றி பும்ரா
இதுவரை மொத்தம் 47 டி20 போட்டிகளில் 1162 ரன்களை எடுத்துள்ள உர்வில் படேல் 30 லட்சம் அடிப்படை விலைக்கு சென்னை நிர்வாகம் வாங்கியுள்ளது. அதைப் பார்க்கும் எதிரணி ரசிகர்கள் காலம் கடந்த பின் இளம் வீரரை வாங்கி என்ன பயன் என்று கலாய்க்கின்றனர். ஆனால் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சிஎஸ்கே எடுத்துள்ள இந்த முடிவை “போர்டு சக்க” என சென்னை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.



