கேப்டன் தோனி இல்லைனா சிஎஸ்கே டம்மியா? சென்னை ரசிகர்கள் விரும்பாத முக்கிய புள்ளிவிவரம் இதோ

CSK-1
- Advertisement -

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 3-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 11வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பஞ்சாப் நேருக்கு நேர் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னையை பந்தாடிய பஞ்சாப் 54 ரன்கள் மெகா வெற்றியை சுவைத்த. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180/8 ரன்கள் குவித்தது.

PBKS vs CSK

- Advertisement -

14/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அதிக பட்சமாக இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி வெறும் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 60 ரன்கள் விளாசி காப்பாற்றினார். சென்னை சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

பஞ்சாப்பின் மாஸ் பவுலிங்கில் படுத்த சென்னை:
அதை தொடர்ந்து 181 என்ற நல்ல இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர்கள் ருத்ராஜி கைக்வாட் 1 ரன்னிலும் ராபின் உத்தப்பா 13 (10) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதனால் 14/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற சென்னைக்கு அடுத்து வந்த முக்கிய வீரர்கள் மொயின் அலி மற்றும் கேப்டன் ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த அம்பத்தி ராயுடுவும் 13 ரன்களில் நடையைக் கட்டியதால் 36/5 என திண்டாடிய சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

CSK vs PBKS

அப்போது ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சிவம் துபே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சென்னையின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார்கள். அதில் ஒருபுறம் அதிரடியாக 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் குவித்த சிவம் துபே அவுட்டாக மறுபுறம் விக்கெட் விழாமல் எம்எஸ் தோனி மெதுவாக விளையாடினார்.

- Advertisement -

ஹாட்ரிக் தோல்வி:
இருப்பினும் அடுத்து வந்த டுவைன் பிராவோ போன்ற லோயர் மிடில் ஆர்டர் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த எம்எஸ் தோனியும் அவுட்டானதால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை வெறும் 126 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வியடைந்தது. இப்போட்டியில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் சென்றது.

CSK vs PBKS 3

மறுபுறம் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் பரிதாப தோல்வி அடைந்தது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் 3 அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து ஹாட்ரிக் தோல்வியை சென்னை சந்தித்துள்ளதை அந்த அணி ரசிகர்கள் பெரிய அவமானமாகக் கருதுகின்றனர்.

- Advertisement -

தோனி இல்லைனா டம்மியா:
ஏனெனில் கடந்த 2008 முதல் தொடர்ந்து கேப்டன்ஷிப் செய்து வந்த எம்எஸ் தோனியின் தலைமையில் 2021 வரை 12 சீசன்களில் பங்கேற்ற சென்னை அதில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 முறை பைனலில் விளையாடி 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக வெற்றிநடை போட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் 40 வயதை கடந்த காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்ட எம்எஸ் தோனி ஐபிஎல் 2022 தொடர் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்சிப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

MS Dhoni Jadeja

அதுவே சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதன்முறையாக களமிறங்கிய சென்னை அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் எம்எஸ் தோனி அவருக்கு உறுதுணையாக இருக்கும் போதிலும் இப்படி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணி ரசிகர்களை மனமுடைய வைத்துள்ளது. இந்நிலையில் கேப்டனாக எம்எஸ் தோனி இல்லை என்றால் சென்னை ஒரு டம்மி என்பது போல ஒரு புள்ளிவிவரம் காட்சியளிக்கிறது.

- Advertisement -

1. அதாவது நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் எம்எஸ் தோனி கேப்டனாக இல்லாமல் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலைமையில் இதுவரை சென்னை மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ளது.

kkr

2. அதில் சுரேஷ் ரெய்னா 5 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். இப்போது ரவீந்திர ஜடேஜா 3 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். இதில் முதல் முறையாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியை தவிர ஏனைய 7 போட்டிகளிலும் சென்னை பரிதாப தோல்வி அடைந்தது.

3. அதாவது தோனி கேப்டனாக இல்லாமல் சென்னை களமிறங்கிய 8 போட்டிகளில் கடைசி 7 போட்டிகளில் தொடர்ந்து சென்னை தோல்வி அடைந்துள்ளது என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை நினைக்கும் அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக உள்ளது.

CSK

4. என்னதான் ஜடேஜா தலைமையில் தோனி விளையாடினாலும் அவரின் பெயரில் கேப்டன்ஷிப் இருக்கும்போது டாஸ் உட்பட நிறைய அதிர்ஷ்டம் சென்னைக்கு இருந்து வந்ததை வரலாற்றில் நிறைய பார்த்துள்ளோம். இருப்பினும் காலத்துக்கும் அவர் கேப்டனாக இருக்க முடியாது என்பதால் இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சென்னையும் அந்த அணி ரசிகர்களும் உள்ளனர்.

இதையும் படிங்க : தொடர் தோல்வியின் எதிரொலி : ஜடேஜாவிற்கு ஆப்பு வைக்கவுள்ள சி.எஸ்.கே நிர்வாகம் – என்ன தெரியுமா?

ஒருவேளை முழுமையாக எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற பின் சென்னையும் பஞ்சாப், பெங்களூரு போன்ற அணிகளைப் போல மோசமாக மாறலாம். ஆனால் அப்படி நடக்கக் கூடாது என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாகவும் பிரார்த்தனையாகவும் இருக்கும்.

Advertisement