இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதேவேளையில் இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் பங்கேற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9-ஆவது இடத்தை பிடித்து வெளியேறியது.
சஞ்சு சாம்சனை வாங்க எங்களுக்கும் ஆசை தான் : சி.எஸ்.கே நிர்வாகி
இந்த தொடரில் காயம் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளில் கேப்டனாக இல்லாமல் இம்பேக்ட் பிளேயராக சஞ்சு சாம்சன் விளையாடி இருந்தார். அவருக்கு பதிலாக இளம் வீரரான ரியான் பராக் கேப்டன்சி செய்திருந்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்ட சஞ்சு சாம்சன் கேப்டனாக கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால் தொடரின் பிற்பாதியில் சாம்சனை தாண்டி அந்த அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை நிரந்தர கேப்டனாக மாற்ற முயன்றதாக அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஏனெனில் ரியான் பராக்கின் நெருங்கிய ஒருவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருப்பதால் அவரது உதவியின் மூலம் பராக் நிரந்தர கேப்டனாக முயன்றதாகவும் கூறப்பட்டது. அதன் காரணமாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வைரலாகின.
அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சன் அடுத்த 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேறி வேறு அணிக்கு செல்வார் என்றும் பேசப்பட்டது. அதோடு சமீபத்தில் சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சன் மறைமுகமாக சி.எஸ்.கே அணிக்கு வரவிருப்பதை சொல்லாமல் சொல்லியிருந்தார். அந்த பதிவை சி.எஸ்.கே அணியின் ரசிகர்களும் வரவேற்றிருந்தனர்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வருகிறாரா? என்பது குறித்த முக்கிய கேள்விக்கு பதிலளித்த சி.எஸ்.கே நிர்வாகி ஒருவர் கூறுகையில் : சி.எஸ்.கே அணிக்கு சஞ்சு வேண்டும் என்றால் அவரை வாங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு இந்திய வீரர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்று துவக்க வீரரான அவரை நாங்கள் அணியில் எடுக்க ஆர்வமாக உள்ளோம். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தனும்னா அவரோட விக்கெட்டை சீக்கிரமா எடுக்கனும் – இர்பான் பதான் பேட்டி
இதன்மூலம் சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளதால் அவரை சி.எஸ்.கே அணி டிரேட் செய்யும் பட்சத்தில் அதே தொகைக்கு சமமான வீரர்களை சி.எஸ்.கே அணியும் விட்டுக்கொடுக்க வேண்டும். இரு அணியின் நிர்வாகமும் ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த டிரேடிங் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



