ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் குஜராத் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களிடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
அதிலும் குறிப்பாக டாஸ் வென்று முதலில் பந்து வீசிய சென்னை அணியானது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 231 ரன்களை விட்டுக் கொடுத்தது. பீல்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சி.எஸ்.கே முதல் விக்கெட்டை எடுக்கவே 210 ரன்கள் வரை விட்டுக்கொடுத்தது.
இருப்பினும் அகமதாபாத் மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதனால் சென்னை அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி இலக்கை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டேரல் மிட்சல் மற்றும் மொயின் அலி ஆகியோர் அரைசதம் அடித்து காப்பாற்றினாலும் பின்னால் வந்த வீரர்களால் இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை. இறுதியில் சி.எஸ்.கே 196 ரன்களை மட்டுமே குவித்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவ முக்கிய காரணமே அஜின்கியா ரஹானே தான் என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஏனெனில் அதிரடியாக விளையாட வேண்டிய வேளையில் முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா ரன் அவுட்டாக காரணமாக இருந்த அவர் அடுத்த ஓவரிலேயே 5 பந்துகளை மட்டுமே சந்தித்து 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க : மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த தல ரசிகர்.. குறும்புடன் காப்பாற்றிய தோனியின் செயல் – நடந்தது என்ன?
கடந்த ஆண்டு மிகச் சிறப்பான பார்மில் இருந்த ரஹானே இந்த ஆண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வழக்கம் போலவே அவரது மோசமான ஆட்டம் இந்த சீசனில் தொடர்ந்து வருகிறது. மேலும் அவரை மூன்றாவது வீரராக களமிறக்குவதா? அல்லது துவக்க வீரராக களமிறக்குவதா? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளதால் அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.



