ஜடேஜா போனதற்கு சிஎஸ்கே ரசிகர்களே முக்கிய காரணம்.. தோனிக்காக 2023இல் செய்த கூத்தை மறக்க முடியுமா?

Ravindra Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2026 தொடருக்கு முன் சென்னை மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் அணிகள் டிரேடிங் முறையில் சாம்சன் – ஜடேஜா மாற்றிக் கொண்டுள்ளன. குறிப்பாக 18 கோடி சம்பளத்திற்கு விளையாடி வந்த சஞ்சு சாம்சனை சென்னை வாங்கியுள்ளது. அவருக்கு பதிலாக 14 கோடிகளுக்கு ரவீந்திர ஜடேஜாவையும், 2.4 கோடிகளுக்கு சாம் கரணையும் சிஎஸ்கே அணி ராஜஸ்தானுக்கு கொடுத்துள்ளது.

அதனால் 2008ஆம் ஆண்டு தம்முடைய ஐபிஎல் கேரியரை துவங்கிய ராஜஸ்தானுக்கு ரவீந்திர ஜடேஜா மீண்டும் விளையாட சென்றுள்ளது நிறைய சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் 2012 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் 2018, 2021, 2023 ஆகிய ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

முக்கிய காரணமான ரசிகர்கள்:

குறிப்பாக 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கைமீறிய வெற்றியை ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்காக பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அதனாலேயே தோனி அவரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாடியதையும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட ஜடேஜா தற்போது ராஜஸ்தானுக்கு சென்றுள்ளதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் முக்கியமான காரணமாக இருந்தனர் என்றால் மிகையாகாது.

ஏனெனில் சிஎஸ்கே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு தோனி முக்கிய காரணமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகிறார். எனவே அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காக சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த வெறித்தனத்துடன் இருப்பது வழக்கமாகும்.

- Advertisement -

வெளியேறிய ஜடேஜா:

எந்தளவுக்கு வெறித்தனம் என்றால் 2023 சீசனில் நிறைய போட்டிகளில் 6வது இடத்தில் களமிறங்கிய ஜடேஜா எப்படியாவது சீக்கிரம் அவுட்டாக வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களே மைதானத்தில் பதாகைகளில் எழுதி வைத்து ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அப்போது தான் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க முடியும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பினார்கள். அத்துடன் ஜடேஜா அவுட்டாகி செல்லும் போது அதற்காக கொஞ்சமும் வருத்தமடையாத சிஎஸ்கே ரசிகர்கள் மெரினா கடற்கரைக்கு கேட்கும் அளவுக்கு கூச்சலிட்டு தோனியை வரவேற்று கொண்டாடினார்கள்.

சிஎஸ்கே ரசிகர்களின் இந்த செயல் புரிந்து கொள்ளக்கூடியது என்றாலும் தமக்கு வேதனையளிப்பதாக 2023 ஐபிஎல் தொடரின் போது ரவீந்திர ஜடேஜா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தம்மை அவுட்டாக வேண்டும் என்று சென்னை ரசிகர்களே நினைத்தால் எப்படி நம்மால் அசத்த முடியும்? என்றும் ஜடேஜா கூறியிருந்தார். கடைசியில் அவுட்டாக வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்த ஜடேஜா தான் 2023 ஐபிஎல் கோப்பையை சென்னைக்காக வென்றுக் கொடுத்தது வேறு கதை.

இதையும் படிங்க: அவரும் ஒத்துகிட்டரு.. சிஎஸ்கே தளபதி ஜடேஜாவை வேதனையுடன் ராஜஸ்தானிடம் விட்டது ஏன்? விஸ்வநாதன் பேட்டி

ஆனால் அப்போதிலிருந்தே தோனிக்காக தம்மை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டம் தட்டியது ஜடேஜாவின் மனதில் ஒரு ஓரத்தில் வடுவாக இருந்து வந்தது. அந்த வடுவே தற்போது சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுவதற்கான முதல் படியை ஜடேஜாவின் மனதில் போட்டிருக்கும் என்றே சொல்லலாம். அதற்காக இங்கே மொத்த பழியையும் சிஎஸ்கே ரசிகர்கள் மேல் போடவில்லை. இருப்பினும் ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறுவதற்கு அவர்களும் முக்கிய காரணம் என்பதே நிதர்சனம்.

Advertisement