ஏக்கமாக பேசிய ஜடேஜா.. தல, சின்னத்தல வரிசையில் புதிய பெயரை சூட்டிய சிஎஸ்கே – ரசிகர்கள்

Ravindra Jadeja csk Fans
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 8ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது. அதனால் 2 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்திய சென்னை மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுமாராக விளையாடி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பின்னர் சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 67*, சிவம் துபே 28, டேரில் மிட்சேல் 27 ரன்கள் அடித்து எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

புதிய பெயர்:
அதனால் வைபவ் அரோரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் கொல்கத்தா முதல் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து 3 கேட்ச்களையும் பிடித்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் அவர் இதையும் சேர்த்து சிஎஸ்கே அணிக்காக 15 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையும் ஜடேஜா சமன் செய்துள்ளார். அந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் தோனிக்கு தல, சுரேஷ் ரெய்னாவுக்கு சின்ன தல என்பது போல் நீண்ட காலமாக அசத்தி வரும் உங்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள்? என்று தொகுப்பாளர் கேட்டார்.

- Advertisement -

அதற்கு “இன்னும் எனக்கு பெயர் உறுதி செய்யப்படவில்லை. சிஎஸ்கே ரசிகர்கள் எனக்கும் ஒரு பெயர் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என ஏக்கத்துடன் ரவீந்திர ஜடேஜா கலகலப்பாக தெரிவித்தார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற நீங்கள் எங்களுடைய தளபதி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் ஜடேஜாவை பாராட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஹேட்டர்ஸ் ஓரம் போங்க.. 125 டெசிபல் சத்தம்.. தல தோனிக்கு வியப்புடன் ஆண்ட்ரே ரசல் கொடுத்த பாராட்டு

அதாவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த இன்று உச்சபட்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜயை தளபதி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல சிஎஸ்கே அணிக்காக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டின் தளபதி என்று சென்னை ரசிகர்களும் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement