ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 61வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தடுமாற்றமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 (21) ரன்களில் அவுட்டானார்.
அவரை அவுட்டாக்கிய சிமர்ஜித் சிங் அடுத்த ஓவரிலேயே மறுபுறம் திணறலாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லரை 21 (25) ரன்களில் பெவிலியன் அனுப்பினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனையும் 15 (19) ரன்களில் அவுட்டாக்கிய அவர் ராஜஸ்தானுக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்தார். அப்போது களமிறங்கிய ரியான் பராக் நிதானமாக விளையாடினார்.
சென்னை போராடி வெற்றி:
அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய துருவ் ஜுரேல் அதிரடியாக விளையாடி 28 (18) ரன்கள் குவித்தார். அதற்கடுத்ததாக வந்த சுபம் துபே டக் அவுட்டானாலும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரியான் பராக் 47* (35) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் ராஜஸ்தான் 141/5 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக சிமர்ஜித் சிங் 3, துசார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 142 ரன்களை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 27 (18) ரன்கள் எடுத்த போது அஸ்வின் சுழலில் சிக்கினார். மறுபுறம் கேப்டன் ருதுராஜ் நிதானமாக விளையாடிய நிலையில் அதற்கடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் தன்னுடைய பங்கிற்கு 4 பவுண்டரியுடன் 22 (13) ரன்கள் குவித்து சஹால் சுழலில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த மொயின் அலி தடுமாற்றமாக விளையாடி 10 (13) ரன்னில் நடையை கட்டினார்.
அதற்கடுத்ததாக வந்த சிவம் துபே அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (11) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 5 (7) ரன்கள் எடுத்திருந்த போது சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் அதை தடுக்கும் வகையில் குறுக்கே ஓடிய ஜடேஜா மீது பந்து பட்டதால் சஞ்சு சாம்சன் அவுட் கேட்டார்.
அதை சோதித்த 3வது நடுவர் ஃபீல்டிங்கை தடுத்ததற்காக ஜடேஜாவுக்கு அவுட் கொடுக்கப்படுவதாக அறிவித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அப்ஃஸ்ட்ரக்ட் தி ஃபீல்ட் முறையில் அவுட்டாக்கப்பட்ட முதல் சிஎஸ்கே வீரர் என்ற மோசமான சாதனையை ஜடேஜா படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 42* (41) ரன்களும் சமீர் ரிஸ்வி 15* (8) ரன்களும் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 145/5 ரன்கள் எடுத்த சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: துச்சமாக பேசிய ஷாகிப்.. வங்கதேசத்துக்கு தோல்வியை பரிசாக கொடுத்து வெற்றியுடன் முடித்த ஜிம்பாப்வே
அதனால் 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய சென்னை கடைசி போட்டியில் வென்றால் 100% பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நல்ல நிலைக்கு வந்துள்ளது. மறுபுறம் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து 2வது நீடிக்கிறது.