ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 166-7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 63 (49), மிட்சேல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா 2, ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கியது சென்னைக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 52 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இளம் வீரர் சாய்க் ரசித் 27 (19) ரன்களில் ஆவேஷ் கான் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 37 (22) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி மீண்டும் 9 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
சென்னை நிம்மதி:
அவரை காலி செய்த ரவி பிஸ்னோய் மறுபுறம் தடுமாறிய ரவீந்திர ஜடேஜாவையும் 7 ரன்னில் அவுட்டாகி திருப்புமுனையை உண்டாக்கினார். அதனால் 96-4 என சரிந்த சென்னை மீண்டும் தோல்வியை சந்திக்குமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது விஜய் சங்கர் 9 (8) ரன்னில் திக்வேஷ் சுழலில் சிக்கினார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மேலும் கவலையடைந்த போது சிவம் துபே நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். கடைசி 5 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்டதால் மீண்டும் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி பெவிலியனுக்கு சென்ற ஏசியில் அமர்வார் என வழக்கம் போல எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். இருப்பினும் எப்போதும் போல தமக்கு உண்மையாக விளையாடிய தோனி அதிரடியாக ரன்களை குவித்தார்.
வரலாற்று சாதனை:
அந்த வகையில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 26* (11) ரன்கள் குவித்தார். அவருடன் சிவம் துபே 43* (37) ரன்கள் குவித்ததால் 19.3 ஓவரில் 168-5 ரன்கள் எடுத்த சென்னை 5 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க: 166 ரன்ஸ்.. தல தோனி உடைக்க முடியாத ஐபிஎல் வரலாற்று சாதனை.. லக்னோவை அடக்கிய சிஎஸ்கே வெல்லுமா?
அடுத்தடுத்த தோல்விகளால் 43 வயதான தோனி வீட்டில் உட்கார வேண்டும் என்று கடந்த வாரம் எதிரணி ரசிகர்கள் பழசை மறந்து சிரித்து கிண்டலடித்தனர். ஆனால் இந்தப் போட்டியில் வயதானாலும் சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்த தோனி ஆட்டநாயகன் விருதை வென்று அவர்களது முகத்தில் கரியை பூசினார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் (43 வருடம் 281 நாட்கள்) ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற பர்வின் ஆம்ரே (43 வருடம் 60 நாட்கள்) சாதனையை உடைத்து தோனி புதிய சாதனை படைத்தார். வரலாற்றின் முதல் ஐபிஎல் (2008) மற்றும் நடப்பு ஐபிஎல் (2025) தொடரிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சரித்திர சாதனையையும் கவனித்துள்ளார்.