CSK vs LSG : தோனி ஏற்படுத்திய இம்பேக்ட், லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து மிரட்டிய போட்டியில் சிஎஸ்கே வென்றது எப்படி?

CSK vs LSG
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. குறிப்பாக புது பொலிவுடன் கட்டமைக்கப்பட்ட சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 2019க்குப்பின் நடைபெறும் இந்த ஐபிஎல் போட்டியில் ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் உடையை அணிந்து தனது முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வியை சந்தித்தால் இப்போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னைக்கு ஆதரவு கொடுத்தனர்.

அந்த நிலையில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியை துவக்கிய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் மிரட்டலாக செயல்பட்டு 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி தொடக்கம் கொடுத்தனர். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் லக்னோவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற சாதனை படைத்த அவர்களில் ருதுராஜ் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (31) ரன்களும் டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (29) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அசத்திய சிஎஸ்கே:
அதைத் தொடர்ந்து வந்த சிவம் துபே தனது பங்கிற்கு 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (16) ரன்களும் மொயின் அலி 3 பவுண்டரியுடன் 19 (13) ரன்களும் விளாசி தங்களது வேலையை செய்து ஆட்டமிழந்தனர். அந்த நிலைமையில் பென் ஸ்டோக்ஸ் 8, ரவீந்திர ஜடேஜா 3 என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் அம்பத்தி ராயுடு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (14) ரன்களும் கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்த சிக்சருடன் 12 (3) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 217/7 ரன்கள் எடுத்தது.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு பவர் பிளே ஓவர்களில் சென்னை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய கெய்ல் மேயர்ஸ் 5.3 ஓவரிலேயே 79 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (22) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த போது மொய்ன் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த தீபக் ஹூடா 2 (6) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடவலாக செயல்பட்ட கேப்டன் கேஎல் ராகுலை 20 (18) ரன்களில் அவுட்டாக்கிய மொய்ன் அலி அதிரடி காட்ட முயன்ற க்ருனால் பாண்டியாவையும் 9 (9) ரன்களில் காலி செய்தார். அதனால் மிடில் ஓவர்களில் தடுமாறிய அந்த அணியை 2 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த நிக்கோலஸ் பூரான் 32 (18) ரன்களிலும் மார்கஸ் ஸ்டோனிஸ் 21 (18) ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இறுதியில் ஆயுஷ் படோனி 23 (18), கிருஷ்ணப்பா கௌதம் 17* (11), மார்க் வுட் 10* (3) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவர்களில் 205/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோல்வியை சந்தித்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி 4 விக்கெட்களையும் துசார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 12 சிறப்பான வெற்றி பெற்ற சென்னை இந்த வருடத்தின் முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பாதைக்கு திரும்பி 5வது கோப்பையை வெல்லும் வெற்றி பயணத்தை சொந்த மண்ணில் துவக்கியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக தோனி அடித்த அந்த 2 சிக்சர்களின் தாக்கம் தான் இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. முன்னதாக கடந்த போட்டியில் மொயின் அலி ஒரு ஓவர் கூட வீசாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் இந்த போட்டியில் சேப்பாக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள தெறிக்க விட்ட லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்த புயலுக்கு மத்தியில் அவரும் மிட்சேல் சாட்னரும் முழுமையாக 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

இதையும் படிங்க: CSK vs LSG : டாசிற்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது குறித்து – மனம் நெகிழ்ந்த தோனி

மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் கேஎல் ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. மொத்தத்தில் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ள சென்னை தமிழக ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement