- Advertisement -
ஐ.பி.எல்

6, 4, 4, 6, 6, 4.. ப்ரேவிஸ் மாஸ்.. 6 வருடம் கழித்து.. 60/5 டூ 183/8 போராடிய சிஎஸ்கே வரலாறு காணாத வெற்றி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி கொல்கத்தாவில் 57வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் சென்னைக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 11, சுனில் நரையும் 26 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ரஹானே அதிரடியாக விளையாட முயற்சித்து 48 (33) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

மிடில் ஆர்டரில் ரகுவன்சி 1 ரன்னில் அவுட்ராகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மனிஷ் பாண்டே தடுமாற்றமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் அடித்து நொறுக்க முயற்சித்த ரசல் 38 (21) ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ரிங்கு சிங் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இறுதியில் மனிஷ் பாண்டே 36* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் கொல்கத்தா 179/6 ரன்கள் அடித்தது.

- Advertisement -

சென்னை போராட்டம்:

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, டேவோன் கான்வே டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்து வந்த உர்வில் படேல் தனது முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கி 31 (11) ரன்கள் விளாசி தாக்கத்தை ஏற்படுத்தி சென்றார்.

அவருக்கு அடுத்ததாக வந்த அஸ்வின் தடுமாறி 8 ரன்னில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ஜடேஜா 19 (10) ரன்னில் அவுட்டானார். அதனால் 60/5 என சரிந்த சென்னை மீண்டும் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த சிவம் துபே – தேவால்ட் ப்ரேவிஸ் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ப்ரேவிஸ் மாஸ் ஆட்டம்:

அதில் துபே நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய ப்ரேவிஸ் 11வது ஓவரில் வைபவ் அரோராவுக்கு எதிராக 6, 4, 4, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து 30 ரன்கள் விளாசி போட்டியை தலைகீழாக மாற்றினார். அதே வேகத்தில் வெளுத்து வாங்கிய அவர் 22 பந்தில் அரை சதத்தை அடித்து 52 ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய துபே 45 (40) ரன்னில் கடைசி நேரத்தில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் கடைசி ஓவரில் சிக்சர் அடித்த தோனி 17* (18), அன்சூல் கம்போஜ் 4* (1) ரன்கள் எடுத்தனர். அதனால் 19.4 ஓவரில் 183/8 ரன்களை எடுத்த சென்னை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 2019க்குப்பின் 6 வருடங்கள் கழித்து 180 ரன்களை இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சென்னை சாதனை வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: கோலியை போல அவமானப்படுத்த தயாரான பிசிசிஐ.. மரியாதையுடன் ஓய்வு பெற்ற ரோஹித்.. வெளியான திடுக் தகவல்

2019க்குப்பின் 180+ சேசிங்கில் தொடர்ந்து சந்தித்த 12 தோல்விகளை சென்னை இன்று நிறுத்தியுள்ளது. அத்துடன் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 70 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (60/5) இழந்த பின்பும் சிஎஸ்கே வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதையும் சேர்த்து இந்த வருடம் மூன்றாவது ஆறுதல் வெற்றியை சென்னை பெற்றது. மறுபுறம் கொல்கத்தாவுக்கு வைபவ் 3, ராணா 2, வருண் 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி பெற முடியாமல் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை விட்டுள்ளது.

- Advertisement -