ஐபிஎல் 2022 : முதல் போட்டியே படு மாஸான போட்டிதான் – முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?

IPL-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தயாராகி வருகிறது. முன்னதாக இந்த 10 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் 2 நாட்கள் மெகா அளவில் நடைபெற்ற ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான 204 வீரர்களை 551 கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளது.

IPL-bcci

- Advertisement -

இதனால் 10 அணிகளும் முழுமை பெற்றுள்ளதை அடுத்து இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் வீரர்களின் நலன் கருதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மைதானங்கள் மற்றும் தேதிகள்:
அதிலும் குறிப்பாக 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் உள்ள முக்கிய மைதானங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி மும்பையில் 55 லீக் போட்டிகளும் புனே நகரில் 15 லீக் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்தில் 20 லீக் போட்டிகளும், டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் 15 லீக் போட்டிகளும், ப்ராபர்ன் மைதானத்தில் 20 லீக் போட்டிகளும், புனேவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் எஞ்சிய 15 லீக் போட்டிகளும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ipl

அத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இந்த ஐபிஎல் தொடரின் இந்த சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின்னர் வரும் மே 29ம் தேதி பைனலுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இந்தியாவில் நிலவும் இப்போதைய நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை பார்ப்பதற்கு 40% ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

- Advertisement -

ஓப்பனிங் மேட்ச்; பிளே ஆப் சுற்று:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் மோத உள்ளது மற்றும் பிளே ஆப் சுற்றுக்கு எங்கு நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

KKRvsCSK

பொதுவாகவே ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடத்தின் முதல் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் விளையாடுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை வென்று தற்போது நடப்பு சாம்பியனாக உள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இந்த வருடத்தின் ஓப்பனிங் போட்டியில் களமிறங்க உள்ளது.

- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் இந்த 2 அணிகளும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய நிலையில் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் இந்த வருடத்திற்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கேம்னு வந்தா இதெல்லாம் நடக்கும் தான். அதுக்காக அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் – ஆறுதல் சொன்ன ரோஹித்

அத்துடன் இந்த தொடரின் லீக் லீக் சுற்று போட்டிகள் நடைபெறும் போது வீரர்கள் வந்து செல்வதற்கு எந்தத் தடையும் ஏற்படாத வகையில் தனி சாலைகள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க மகாராஷ்டிரா மாநில அரசு உறுதி அளித்துள்ளதாகவும் பிசிசிஐ செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Advertisement