ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமாகிய இளம் வீரர் சர்பராஸ் கான் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.
இதன் மூலம் தற்போது அனைவரது பார்வையும் சர்பராஸ் கான் மீது விழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய நேர்த்தியான அதிரடி ஆட்டம் தற்போது அனைத்து ஐபிஎல் அணிகளையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் பொதுவாகவே ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே அவர்களுக்கு எதிராக சர்பராஸ் கான் போன்று அதிரடியாக விளையாடும் வீரரை எடுக்க தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு போட்டியிட்ட சர்ஃபராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவரது இந்த ஆட்டத்திற்கு பிறகு தற்போது கொல்கத்தா அணி அவரை அணியில் எடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போன்று தோனி தலைமையிலான சென்னை அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மினி ஏலத்தில் விலை போகாத அவரை இப்படி நேரடியாக அணியில் தேர்வு செய்ய முடியுமா? இதற்கு விதிமுறைகள் என்ன சொல்கிறது? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் எந்த அணி வேண்டுமானாலும் சர்பராஸ் கானை இந்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அணியில் எடுக்கலாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. அதாவது ஐபிஎல் விதிமுறைப்படி ஏலம் முடிந்த பின்னரும் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக எந்தவொரு அணியும் எந்தவொரு வீரரையும் தேர்வு செய்யலாம். ஆனால் அப்படி சர்பராஸ் கானை தேர்வுசெய்ய விரும்பும் அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த தொடரில் இருந்து விலகினாலோ அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கானை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : கே.எல் ராகுலின் விலகல் காரணமாக சொதப்பல் வீரருக்கு அடித்த லக் – நான்காவது போட்டியிலும் விளையாட வாய்ப்பு
அந்த வகையில் மாற்றுவீரராக கட்டாயம் சர்பராஸ் கானால் எந்த ஒரு அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் டிரேடிங் முறையில் அவரை யாராலும் வாங்க முடியாது. ஏனெனில் மினி ஏலத்தில் ஒரு வீரர் வாங்கப்பட்டால் மட்டுமே அணிகளுக்கு இடையே டிரேடிங் என்பது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.