TNPL 2023 : கில்லியாக சொல்லி அடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரன் மழை பொழிந்து சேலத்தை மடக்கியது எப்படி?

- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் டிஎன்பிஎல் டி20 தொடரின் 2023 சீசன் தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் ஜூன் 13ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் வெற்றிகரமான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரஞ்சன் பிரதோஷ் பால் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் ஆரம்ப முதலே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சுமாராக பந்து வீசிய சேலம் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ஓவருக்கு 10 ரன்களை குவித்த இந்த ஜோடி 9.1 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கத்தை கொடுத்த போது ஜெகதீசன் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த அபாரஜித் உடன் கைகோர்த்த பிரதோஷ் பால் அரைசதம் அடித்து நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சேப்பாக்கத்தை மேலும் வலுப்படுத்தி 12 பவுண்டரி 1 சிக்சருடன் 88 (55) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
அடுத்த சில ஓவர்களிலேயே அபாரஜித் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 29 (19) ரன்களில் அவுட்டாக கடைசி நேரத்தில் சஞ்சய் யாதவ் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் குவித்து சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் சேப்பாக் 217/5 ரன்களை குவித்த நிலையில் சுமாராக செயல்பட்ட சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 218 என்ற பெரிய இலக்கை துரத்திய சேலத்துக்கு அமித் சாத்விக் 6 (7) ஆகாஷ் சும்ரா 24 (27) என தொடக்க வீரர்கள் தடுமாற்றமாக செயல்பட்டு குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அரவிந்த் 17 (14) மோகித் ஹரிஹரன் 14 (12) கௌஷிக் காந்தி 23 (20) மான் பாப்னா 8 (5) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அத்துடன் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சேப்பாக்கத்தின் சிறப்பான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் விக்கெட்டுகளை சீரான இடைவெளிகளில் பரிசளித்ததால் 20 ஓவர்களில் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்த சேலம் முடிந்தளவுக்கு போராடியும் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அந்தளவுக்கு பவர் பிளே முதலே துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை உண்டாக்கி 52 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த சேப்பாக்கம் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக பாபா அபாரஜித், ராக்கி பாஸ்கர் மற்றும் விஜய் அருள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ஹரிஷ் குமார் மற்றும் ரஹீல் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த போட்டியில் பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சேப்பாக்கத்தின் வெற்றிக்கு 88 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய பிரதோஷ் பால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க:தோனி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு. 15 ஆம் தேதி நடைபெறயிருக்கும் விசாரணை – என்ன நடந்தது?

அந்த வகையில் தங்களுடைய முதல் போட்டியிலேயே பெரிய வெற்றியை சுவைத்த சேப்பாக் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. மறுபுறம் மோசமாக செயல்பட்ட சேலம் 7வது இடத்திற்கு ஆரம்பத்திலேயே தள்ளப்பட்டது.

Advertisement