
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் 6ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் 2வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் துசார் ரஹீஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் அடுத்ததாக வந்த ராஜ்குமார் மிகவும் திண்டாட்டமாக விளையாடி 14 (22) ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரகீஜா அரை சாதத்தை அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (43) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அவருடன் மிடில் ஆர்டரில் சேர்ந்து விளையாடிய பிரதோஷ் பால் 38 (28) ரன்கள் எடுத்தார். இறுதியில் முகமது அலி 16 (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் திருப்பூர் 173/6 ரன்கள் குவித்தது. சேப்பாக் அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய சேப்பாக்கம் அணிக்கு துவக்க வீரர் ஆசிக் 2 (4) ரன்னில் சிலம்பரசன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் பாபா அபாரஜித் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் பட்டாசாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் மோகித் ஹரிஹரன் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 (22) ரன்கள் குவித்து கேப்டன் சாய் கிஷோர் சுழலில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் தம்முடைய பங்கிற்கு திருப்பூர் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். அந்த வகையில் கேப்டன் அபாரஜித் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சேப்பாக்கத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் அபாரஜித் தலா 5 பவுண்டரி சிக்சருடன் 77* (48) ரன்கள் விளாசினார்.
இதையும் படிங்க: இனிமே ஐ.பி.எல் கோப்பையை ஜெயிச்சா அதை கொண்டாட வேணாம் ப்ளீஸ் – கபில் தேவ் வேண்டுகோள் (காரணம் என்ன?)
விஜய் சங்கர் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 41* (23) ரன்கள் எடுத்ததால் 16 ஓவரிலேயே 174/2 ரன்களை எடுத்த சேப்பாக் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் முதல் போட்டியிலேயே வென்ற அந்த அணி இத்தொடரை வெற்றிகரமாக துவக்கியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் திண்டுக்கல்லை முந்திய சேப்பாக்கம் முதலிடத்தை பிடித்து அசத்தியது.