இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த வகையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இனி ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டம் வேண்டாம் : கபில் தேவ்
கடந்த 18 ஆண்டுகளில் ஆர்.சி.பி அணி தற்போது தான் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பதன் காரணமாக இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள ஆர்.சி.பி ரசிகர்கள் கோலாகமாக கொண்டாடியிருந்தனர். அதிலும் குறிப்பாக பெங்களூருவில் உள்ள ஆர்.சி.பி ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதோடு ஐ.பி.எல் கோப்பையுடன் பெங்களூருக்கு வந்த ஆர்.சி.பி வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பையும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் ஆர்.சி.பி அணி வெற்றிபெற்ற அடுத்த நாளே பெங்களூருவில் வெற்றி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த ரசிகர்கள் உயிரிழப்பு சம்பவம் பல்வேறு தரப்பினரையும் வருத்தமடைய செய்துள்ளது. மேலும் இந்த துக்க நிகழ்விற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்த விவகாரம் குறித்து பேசுகையில் கூறியதாவது :
பெங்களூரு அணி வெற்றியை கொண்டாடிய போது அந்த கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற வெற்றி கொண்டாட்டத்தை பொதுவெளியில் நடத்தக்கூடாது.
இதையும் படிங்க : இந்த சேன்ஸை மட்டும் குடுத்தா சாய் சுதர்சன் அசத்துவார்.. ஆதரவு தெரிவித்த – மைக்கல் கிளார்க்
எதிர்காலத்தில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அமைதியாக இருப்பதே நல்லது. ஏனெனில் வெற்றி கொண்டாட்டங்களை விட மனித உயிர் மிகவும் முக்கியம். எனவேதான் இதுபோன்ற பொதுவெளி கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



