158/2 டூ 172/8.. 12 பந்தில் 5 விக்கெட்ஸ்.. லோகேஷ் மேஜிக்.. திண்டுக்கலிடம் கைமீறிய வெற்றியை பறித்த சேப்பாக்

TNPL 14
- Advertisement -

தமிழகத்தில் டிஎன்பிஎல் பிரீமியர் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சேலத்தில் உள்ள ஃஎஸ்சிஎப் மைதானத்தில் 14வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக்கம் அணிக்கு துவக்க வீரர்கள் ஆசிக் 12, மோகித் ஹரிஹரன் 4, நாராயண் ஜெகதீசன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் கேப்டன் பாபா அபாரஜித் பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை அடித்து 56 (38) ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் 26 (16), ஸ்வப்னில் சிங் 20 (14) ரன்களை அதிரடியாக எடுத்தார்கள்.

- Advertisement -

கைமீறிய வெற்றி:

கடைசி நேரத்தில் சுனில் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி 32* (18), தினேஷ் ராஜ் 13* (6) ரன்கள் விளாசி சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் சேப்பாக்கம் 180/6 ரன்கள் எடுத்த நிலையில் திண்டுக்கல் அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அடுத்த விளையாடிய திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 13 (14) ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி அசத்தினார். அவருடன் ஜோடி சேர்த்த பாபா இந்திரஜித் தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். 2வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்த அந்த ஜோடி திண்டுக்கல்லை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

- Advertisement -

லோகேஷ் மேஜிக்:

அந்த ஜோடியில் அஸ்வின் 67 (46) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹன்னி சைனியை 7 (3) ரன்னில் காலி செய்த லோகேஷ் ராஜ் மறுபுறம் அதிரடி காட்டிய பாபா இந்திரஜித்தை 73 (43) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கி அதற்கடுத்ததாக வந்த விமல் குமாரை டக் அவுட்டாக்கினார். அவரது மேஜிக் பந்து வீச்சில் 17.1 ஓவரில் 158/2 என்ற வலுவான நிலையில் இருந்த திண்டுக்கல் திடீரென 163/5 என சரிந்தது.

இதையும் படிங்க: இது ஸ்கூல் இல்ல.. 19 வயதில் ஸ்டீவ் வாக் ஸ்லெட்ஜ் செய்ததே.. 2007இல் ஃபிளின்டாப் பதிலடிக்கு காரணம்.. யோக்ராஜ்

அடுத்ததாக வந்த கார்த்திக் சரணும் டக் அவுட்டானார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது ஆகாஷ் சர்மா 4, வருண் சக்ரவர்த்தியை 0 ரன்களில் அவுட்டாக்கிய லோகேஷ் ராஜ் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதனால் 20 ஓவரில் திண்டுக்கல்லை 172/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சேப்பாக் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு வெறும் 12 பந்தில் 13 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய லோகேஷ் ராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement