
இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. அத்தொடருக்கு முன்பாக விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்நிலையில் சுப்மன் கில் வருங்காலங்களில் அனுபவத்தால் முன்னேறி இந்தியாவின் சிறந்த கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் கிரைக் மெக்மிலன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கில் நல்ல கேப்டன் போல் தெரிகிறது. முதல் தொடர் மிகவும் கடினமானது”
“அது போன்ற அழுத்தமான தொடரில் அவர் சில தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் முதல் தொடரில் நீங்கள் இளம் கேப்டனிடம் அது போன்ற தவறுகளை எதிர்பார்ப்பீர்கள். அனுபவத்தின் உதவியுடன் அவர் சிறப்பாக மாறுவார். வருங்காலத்தில் அவர் இருப்பார் என்பதால் இந்தியா அவரை நம்பி முதலீடு செய்யலாம். தன்னுடைய அணியின் ஆட்டம், ஸ்டைல் குறித்து அவர் விரைவில் தெரிந்து கொள்வார். அது முக்கியமானது” எனக் கூறினார்.
அத்துடன் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் இந்தியாவின் வெற்றிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட வீரர் தற்போதைய இந்திய அணிகள் இல்லாதது இழப்பு என்று தெரிவிக்கும் மெக்மிலன் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஆசிய கண்டத்தில் உங்களுக்கு ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது முன்பிருந்த அஸ்வின் போன்ற ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் தேவை. நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உங்களுக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை. அங்கே தான் இந்தியா ஹர்திக் பாண்டியா போன்ற வீரரை தவற விடுகிறார்கள். பாண்டியா மிதவேகத்தில் பௌலிங் செய்து லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்யக் கூடியவர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் இப்போவே தோனியை தாண்டிட்டாரு.. இனிமே இன்னும் பிரமாதமா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
முன்னதாக 2018 – 2019 காலகட்டங்களில் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முன்னணி ஆல் ரவுண்டராக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதத்தையும் இங்கிலாந்தில் 5 விக்கெட்டையும் எடுத்தார். நாளடைவில் காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியவில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். அதனால் இந்திய அணி நித்திஷ் ரெட்டி போன்ற புதிய ஆல் ரவுண்டர்களை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.