தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே நாளில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு கேப்டன் சான் மசூதை அறிமுக வீரர் கோர்பின் போஸ்க் 17 ரன்களில் அவுட்டாக்கினார்.
குறிப்பாக தனது அறிமுக போட்டியில் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவர் விக்கெட்டை எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கேரியரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த 25வது வீரர் மற்றும் 5வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற தனித்துவமான சாதனையை போஸ்க் படைத்தார்.
அசத்தில் அறிமுகம்:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சாய்ம் ஆயுப் 14, பாபர் அசாம் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். மிடில் ஆர்டரில் கம்ரான் குலாம் 54, அமீர் ஜமால் 28 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் பாகிஸ்தானை 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 4, டேன் பாட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 301 ரன்கள் எடுத்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு துவக்க வீரர் ஐடென் மார்க்கம் 89 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் டீ ஜோர்சி 2, ரிக்கல்டன் 8, ஸ்டப்ஸ் 9, டேவிட் பேடிங்கம் 30, கேப்டன் பவுமா 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
உலக சாதனை:
ஆனால் 9வது இடத்தில் களமிறங்கிய கோர்பின் போஸ்க் அபாரமாக விளையாடி 15 பவுண்டரியுடன் 81* (93) ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்காவுக்கு 90 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே 9வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இதே வருடம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர்ரில் இலங்கையின் மிலன் ரத்நாயகே 72 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: விராட் கோலி மாஸ்டர்க்ளாஸ் எதிர்பார்த்தோம்.. இந்தியா 2 பரிசை தட்டில் வெச்சு கொடுத்துட்டாங்க.. ஸ்மித் மகிழ்ச்சி பேட்டி
பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக நாசிம் ஷா 3, குர்ரம் ஷசாத் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் இரண்டாவது நாள் முடிவில் 88-3 ரன்கள் எடுத்துள்ளது. சாய்ம் ஆயுப் 27, கேப்டன் மசூத் 28, கம்ரான் குலாம் 4 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ஷகீல் 8*, பாபர் அசாம் 16* ரன்களில் உள்ளார்கள்.



