வரலாற்றில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு – அட்டவணை, முழுவிவரம் இதோ

IND-Womens
- Advertisement -

உலக அளவில் கிரிக்கெட் என்பது இன்னும் கால்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு அடுத்ததாகவே பின் தங்கியுள்ளது. குறிப்பாக ஒலிம்பிக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவம் மிகுந்த விளையாட்டு தொடர்களில் இதர விளையாட்டுப் போட்டிகள் முதன்மையாக இடம் பிடிக்கும் நிலையில் கிரிக்கெட்டால் அதில் நிரந்தரமான இடத்தைப் கூட பிடிக்க முடியவில்லை. இதர விளையாட்டு போட்டிகளை விட நீளம், நேரம் ஆகியன கிரிக்கெட்டில் அதிகப்படியானதாக இருப்பதுடன் வெற்றியாளரை குறிப்பிட்ட சில போட்டிகளில் தீர்மானிக்க முடிவதில்லை என்பதே அதற்குக் காரணமாக அமைகிறது. இதே காரணத்தால் காமன்வெல்த் போன்ற உலகின் டாப் விளையாட்டு தொடர்களிலும் கிரிக்கெட் இடம் பெறாமல் இருந்து வந்தது.

அந்த நிலைமையில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 2022 காமன்வெல்த் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுகின்றன. இதில் நீண்ட ஆலோசனைகள் மற்றும் விவாதத்திற்கு பின் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஆடவர் கிரிக்கெட்டுக்கு பதிலாக மகளிர் கிரிக்கெட் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998-ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உட்பட முன்னணி ஆடவர் அணிகள் பங்கேற்றன. அதன்பின் கடந்த 23 வருடங்களுக்கு பின் இப்போதுதான் முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

காமன்வெல்த்தில் இந்தியா:
மேலும் வரலாற்றிலேயே முதல்முறையாக இப்போதுதான் மகளிர் கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகளில் விளையாடப்பட உள்ளதால் இது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற டாப் அணிகள் ஐசிசி தரவரிசையின் படி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் பார்படாஸ் போன்ற ஒருசில அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூலை 29ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கும் இந்த காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

அந்த அணிகள் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தலா ஒரு போட்டியில் மோத உள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் தங்கப் பதக்கத்துக்காக மோத உள்ளன. அதில் தோல்வியடையும் அணி வெள்ளிப் பதக்கத்தை பெறவுள்ளது. அதேபோல் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி தனியாக நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்துமே பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

குரூப் ஏ அணிகள்: ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், பார்படாஸ்
குரூப் பி அணிகள்: இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து

இந்திய அணி:
இந்த தொடரில் களமிறங்கும் இந்திய அணியை பிசிசியை அறிவித்துள்ளது. அதில் சமீபத்தில் ஓய்வு பெற்ற நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ்க்கு பின் புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்மன்பிரீட் கவூர் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருக்கு உறுதுணையாக நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

கடந்த வாரம் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அற்புதமாக செயல்பட்டு 2 தொடர்களையும் வென்றது. அந்தத் தொடரில் அபாரமாக செயல்பட்ட பெரும்பாலான வீராங்கனைகளுக்கு இந்த காமன்வெல்த் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி இதோ:
ஹர்மன்ப்ரீட் கௌர் (கேப்டன்) , ஸ்ம்ரிதி மந்தனா (துணை-கேப்டன்), ஷபாலி வர்மா , எஸ் மேக்னா, தானியா சப்னா பாட்டியா (கீப்பர்), யஸ்டிக்கா பாட்டியா (கீப்பர்), தீப்தி சர்மா , ராஜேஸ்வரி கைக்வாட், பூஜா வஸ்திரக்கர், மேக்னா சிங், ரேணுகா தாகூர், ஜெமிமா ரொட்ரிகஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், ஸ்னே ராணா.
ஸ்டாண்ட்-பை வீராங்கனைகள்: ரிச்சா கோஷ், பூனம் யாதவ், சிம்ரன் தில் பகதூர்.

இதையும் படிங்க : IND vs ENG : உம்ரான் மாலிக்கை டி20யில் தேர்வு செய்திருக்கவே கூடாது – மொதல்ல அவருக்கு இந்த டெஸ்ட்ட வைங்க

இந்த தொடரில் இந்தியாவின் லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணை இதோ:
1. ஜூலை 29, மாலை 4.30 மணி, ஆஸ்திரேலியா V இந்தியா, பர்மிங்காம்
2. ஜூலை 31, மாலை 4.30 மணி, இந்தியா V பாகிஸ்தான், பர்மிங்காம்
3. ஆகஸ்ட் 3, இரவு 11 மணி, பார்படாஸ் V இந்தியா, பர்மிங்காம்

Advertisement