உங்கள நம்பி அணியில் சேத்தத்துக்கு நல்ல வேலை பாத்துடீங்க. பெங்களூரு அணி வீரரை – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவதால் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இரு அணிகளும் இரண்டு மாற்றங்களை செய்திருந்தன. சென்னை அணியில் மொயின் அலி மற்றும் லுங்கி இங்கிடிக்கு பதிலாக இம்ரான் தாஹிர் மற்றும் ப்ரோவோ இடம்பிடித்தனர். பெங்களூர் அணியில் ஷபாஸ் அஹமத் மற்றும் கேன் ரிச்சார்ட்சனுக்கு பதிலாக நவ்தீப் சய்னி மற்றும் டேனியல் கிறிஸ்டியன் விளையாடினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது. முதல் இன்னிங்சில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 192 ரன்களை பெங்களூர் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பெங்களூர் அணியால் 20 ஓவரில் 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

இந்தப்போட்டியில் முதல் இன்னிங்சில் சென்னை அணியானது 14வது ஓவரில் ரெய்னா மற்றும் டுயூப்ளசிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து 111 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. பிறகு களமிறங்கிய ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தர் வீசிய 15 ஓவரிலேயே டேனியில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் கிறிஸ்டியனோ அந்த கேட்டை கோட்டைவிட்டார். அப்போது ஜடேஜ ரன் ஏதும் அடிக்காமல் இருந்தார். அவர் தவறவிட்ட அந்த கேட்சால்தான் ஆட்டமே திசைமாறியது. அதற்குப் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 37 ரன்கள் அடித்து சென்னை அணியின் ஸ்கோரை 191 ரன்களுக்கு உயர்த்தினார். பேட்டிங்கில் 28 பந்துகள் பிடித்த ஜடேஜா 62 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பேட்டிங்கில் மிக அற்புதமாக செயல்பட்ட ஜடேஜா அதே நம்பிக்கையுடன் பவுலிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். முக்கியமாக இந்த தொடர் முழுவதும் பெங்களூர் அணியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆட்டயநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

christian

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய முக்கிய காரணமாக இருந்தது ஜடேஜாவின் பேட்டிங் தான். ஆனால் அவர் ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கொடுத்த எளிதான கேட்சை கோட்டைவிட்ட டேனியல் கிறிஸ்டியனை பெங்களூர் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர். பெங்களூர் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த டேனியல் கிறிஸ்டின் அந்தப் போட்டிகளில் சோபிக்க தவறியதால் மற்ற இரண்டு போட்டிகளில் ஓரம் கட்டப்பட்டார். ஆனால் இன்று அணிக்குள் கொண்டுவரப்பட்ட அவர் ஜடேஜாவின் கேட்சை தவறவிட்டதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.