
ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 16ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற 37வது போட்டியில் சிட்னி தண்டர் அணியை சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ரன்கள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவரில் 191/5 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 100 (42) ரன்களை விளாசினார். ஆனால் அவருடன் இணைந்து விளையாடிய பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் அதற்கு நேர்மாறாக மெதுவாக பேட்டிங் செய்து 47 (39) ரன்கள் குவித்தார்.
முன்னதாக பிக்பேஷ் தொடரில் 12வது ஓவருக்கு பவர்சர்ஜ் என்ற சிறப்பம்சம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி பெரிய ரன்கள் குவிக்க நினைத்த ஸ்டீவ் ஸ்மித் 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை எடுக்கவில்லை. குறிப்பாக இத்தொடர் முழுவதுமே மெதுவாக விளையாடி வரும் பாபர் அசாமால் அதிரடியாக விளையாட முடியாது என்ற கருதிய ஸ்மித் 12வது ஓவருக்கான ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக் கொண்டார்.
அதற்காக பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் ரியான் ஹாட்லி வீசிய 12வது ஓவரில் பட்டாசாக விளையாடிய ஸ்மித் 6, 6, 6, 6, 4, 2 என 30 ரன்களை விளாசி தம்முடைய முடிவை சரியென்று நிரூபித்தார். மறுபுறம் அதற்காக மகிழ்ச்சியடையாத பாபர் அசாம் வெறுப்புடன் விளையாடி அடுத்த ஓவரிலேயே கிளீன் போல்ட்டானார். அதனால் கோபமடைந்த அவர் பெவிலியன் செல்வதற்கு முன் பவுண்டரி எல்லையை தன்னுடைய பேட்டால் அடித்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில் அப்போட்டியில் பாபர் அசாமை அதிக பந்துகளை எதிர்கொள்ள வைப்பதே தங்களது திட்டமாக இருந்ததாக சிட்னி தண்டர் அணியின் வீரர் கிறிஸ் கிரீன் தெரிவித்துள்ளார். ஏனெனில் பொதுவாகவே பந்துகளுக்கு தகுந்த ரன்களை மட்டுமே அடிக்கும் பாபர் அசாம் அதிரடியாக விளையாட மாட்டார். எனவே அவரை அவுட்டாக்காமல் அதிக பந்துகளை எதிர்கொள்ள வைத்தாலே எளிதாக வெற்றி பெறலாம் என்று நினைத்ததாகவும் கிரீன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த விஷயம் தெரியாம.. 5% கூட சாதிக்காத நீங்க ரோஹித்தை குறை சொல்லலாமா? ரியானை சாடிய திவாரி
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முடிந்தளவு பாபர் அசாம் அதிகப்படியான பந்துகள் எதிர்கொள்வதை விரும்பினோம். பெரும்பாலும் எளிதாக துவங்கும் அவர் பின்னர் பந்துகளுக்கு தகுந்த ரன்களை பிடிக்கும் வகையில் விளையாடுகிறார். எனவே நீங்கள் வலுக்கட்டாயமாக அவரை பந்தை அடிக்கும் ஸ்ட்ரைக் பகுதியில் வைத்துக் கொள்வதையே விரும்புவீர்கள்” என்று கூறினார்.