இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து 3வது போட்டி ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.
முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளிலும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. குறிப்பாக 26, 24 ரன்கள் அடித்த அவர் நல்ல துவக்கத்தைப் பெற்ற போதிலும் பெரிய ஸ்கோர் குவிக்கவில்லை. அதனாலேயே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த அவர் 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். மறுபுறம் 3வது இடத்தில் இருந்த விராட் கோலி நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
தெரியாமல் பேசிய கோச்:
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று 2வது போட்டியின் முடிவில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட்டிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தென்னாப்பிரிக்கா தொடருக்குப்பின் நியூசிலாந்து தொடருக்கு முன் ரோஹித் சர்மா எவ்வித கிரிக்கெட்டிலும் விளையாடாதது காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார். உண்மையில் தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் விஜய் ஹசாரே கோப்பையில் மும்பைக்காக விளையாடிய ரோஹித் சர்மா திரிபுராவுக்கு எதிராக சதத்தை அடித்து அசத்தினார்.
அப்படி இருந்தும் ரோஹித் பற்றி ரியான் டஸ்சேட் அவ்வாறு சொன்னது ரசிகர்களின் புருவங்களை உயர்த்துவதாக அமைந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கிடையே ரோஹித் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடியதை தெரிந்து கொள்ளாமல் பயிற்சியாளர் இப்படி பேசலாமா? என்று அவரை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
திவாரி சாடல்:
“ரியான் டென் டஸ்சேட் என்னுடன் கொல்கத்தா ஐபிஎல் அணியில் 4 வருடங்கள் விளையாடியுள்ளார். அவர் நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் சொன்ன கருத்தை சிந்தித்து தெரிவித்திருக்க வேண்டும். நெதர்லாந்துக்காக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா தம்முடைய கேரியரில் சாதித்தவற்றில் அவர் வெறும் 5% கூட பேட்ஸ்மேனாவும் கேப்டனாகவும் சாதித்ததில்லை என்பதை மரியாதையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ”
இதையும் படிங்க: இந்தியா – நியூஸி 3வது ஒன்டே நடைபெறும் கோட்டை இந்தூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்திய தேசத்திற்கு நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்தார். அதன் பின்பும் இப்படி பேசுவது உங்கள் வீரருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். இத்தனைக்கும் ரியான் இந்திய அணி நிர்வாகத்தில் அங்கமாக இருக்கிறார். வீட்டில் அமர்ந்து கொண்டு பேசவில்லை. எனவே இப்படிப்பட்ட கருத்தை ஏன் அவர் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட கருத்தை அவர் சொல்லக்கூடாது என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



