மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பும் கிறிஸ் கெயில், எப்போ தெரியுமா? – அவரே பகிர்ந்த தகவல்

Gayle
- Advertisement -

உலக அளவில் பிரசித்தி பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கோலாகலமாக துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடரில் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த தொடர் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

இந்த தொடர் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே பல இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அதேபோல் சமீப காலங்களில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் பார்ம்மை இழந்த எம்எஸ் தோனி, குல்தீப் யாதவ் போன்ற தரமான வீரர்களும் நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக செயல்படத் தொடங்கியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

மிஸ் யூ கிறிஸ் கெயில்:
இருப்பினும் இந்த தொடரில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒருசில ஜாம்பவான்கள் முதல் முறையாக பங்கேற்காதது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக தற்போது 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா காலம் காலமாக அதிரடியாக விளையாடி மிஸ்டர் ஐபிஎல் என பெயர் எடுத்த போதிலும் சமீப காலங்களாக பார்ம் இல்லாத காரணத்தால் முதல் முறையாக யாரும் வாங்கவில்லை என்பதால் இந்த தொடரில் பங்கேற்க வில்லை.

அதன் காரணமாக வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ள அவரை ஐபிஎல் போட்டிகளின் இடையிடையே பார்த்து ரசிகர்கள் மனதை தேற்றிக் கொள்கின்றனர். அவரைப் போல புதிது புதிதாக ஷாட்களை அடித்து ரசிகர்களிடையே மிஸ்டர் 360 டிகிரி எனப்பெயர் பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவிலியர்ஸ் வயது காரணமாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்று விட்டதால் இந்த முறை பங்கேற்கவில்லை. இவர்களைப் போலவே வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ஓய்வை பற்றி அறிவிக்காத போதிலும் இந்த தொடரின் ஏலத்தில் பங்கேற்காமல் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

- Advertisement -

மீண்டும் வருகிறார் கிறிஸ் கெயில்:
கடந்த 2008 முதல் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக அதிரடி சரவெடியாக விளையாடிய அவர் பல இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்கு காலம் காலமாக விருந்து படைத்து வந்தார். குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 175* ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். மேலும் 357 சிக்ஸர்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட வீரர், அதிக சதங்கள் அடித்த வீரர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ள அவர் உலகம் முழுவதிலும் ஐபிஎல் தொடரை மிகவும் பிரபலப்படுத்தியவர் என்று கூறினால் மிகையாகாது.

பொதுவாகவே அதிரடியாக விளையாட கூடிய அவரை கெயில் சூறாவளி புயல் என ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் 40 வயதை கடந்த காரணத்தால் கடந்த சில வருடங்களாக பஞ்சாப் அணியில் விளையாடிய போது பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறினார். அந்த நிலையில் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் பங்கேற்ற அவர் துபாயில் நடந்த 2-வது பகுதியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாத காரணத்தால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் 2023 சீசன் வாயிலாக ஐபிஎல் தொடரில் மீண்டும் கால்தடம் பதிக்க உள்ளதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இன்ஸ்டாகிராமில் உறுதி:
பொதுவாக “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்ற அழகான பழமொழிக்கு ஏற்ப தற்போது மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பார்த்த அவரின் தசைகள் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட தூண்டியதை போல் தெரிகிறது. அதனால் உத்வேகம் அடைந்த அவர் மீண்டும் தனது உடலை முறுக்கேற்றுவதற்காக உடற்பயிற்சி கூடத்தில் கடுமையான பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ள அவர் “அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான வேலைகளை இப்போதே தொடங்கியுள்ளேன்” என்பது போல பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே மிகவும் வைரலாக மாறி வருகிறது. ஏனெனில் தற்போது 42 வயதை கடந்துவிட்ட அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக திகழ்ந்த வெளிநாட்டு கேப்டன்களின் பட்டியல் இதோ – உங்க பேவரைட் யாரு?

அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு உள்ள மவுசுக்கு வயதானாலும் அடுத்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற நிச்சயம் ஏதேனும் ஒரு அணி வாங்கும் என்பதால் ஐபிஎல் 2023 தொடரில் கிறிஸ் கெய்ல் ஆட்டத்திற்காக ரசிகர்கள் மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement