வீடியோ : 100வது போட்டியில் டக் அவுட்டானாலும் வின்னிங் ஷாட் அடித்து தனித்துவமான உலக சாதனை படைத்த புஜாரா

Nathan Lyon Pujara IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து 139/7 என தடுமாறினாலும் 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் பட்டேல் 74 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களும் எடுத்து காப்பாற்றினர். அதனால் ஓரளவு தப்பிய இந்தியாவை 262 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லய்ன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட மோசமாக பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 113 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

புஜாராவின் வின்னிங் ஷாட்:
இறுதியில் 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ராகுல் 1, விராட் கோலி 20, ஷ்ரேயாஸ் ஐயர் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 31 (20) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதை வீணடிக்காத வகையில் அடுத்து வந்த கேஎஸ் பரத் 23* (22) ரன்கள் எடுக்க மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கி வழக்கம் போல நங்கூரமாக செயல்பட்ட செடேஸ்வர் புஜாரா 31* (74) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

முன்னதாக இப்போட்டியை தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியாக விளையாடிய புஜாரா இந்திய வீரர்களின் பாராட்டுக்கு மத்தியில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடம் சிறப்பு தொப்பியை கௌரவ பரிசாக பெற்று களமிறங்கினார். குறிப்பாக இதுவரை 100வது போட்டியில் எந்த இந்திய வீரரும் சதமடிக்காத நிலையில் நீங்கள் சதமடிக்க விரும்புவதாக சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகவே வாழ்த்தினார்.

- Advertisement -

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் இன்னிங்ஸில் நேதன் லயனிடம் டக் அவுட்டான புஜாரா பரிதாப சாதனை படைத்தார். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட அவர் டோட் முர்பி வீசிய 26.4வது பந்தில் இறங்கி வந்து பவுண்டரியை பறக்க விட்டு குறைந்தபட்சம் தன்னுடைய 100வது போட்டியில் வின்னிங் சாட் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து மனதை தேற்றிக்கொண்டார்.

சொல்லப்போனால் இதன் வாயிலாக தங்களது 100வது போட்டியில் வெற்றி பெறும் ரன்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையும் முதல் ஆசிய மற்றும் இந்திய வீரர் என்ற தனித்துவமான பெயரையும் புஜாரா பெற்றுள்ளார். வரலாற்றில் இதற்கு முன்பாக கடந்த 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங் இதே போல தன்னுடைய 100வது போட்டியில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : என் திறமையை உணர்த்தி பேட்டிங்கில் முன்னேற அவர் தான் ஹெல்ப் பண்ணாரு – ஆஸி ஜாம்பவானை பாராட்டிய அக்சர் படேல்

அதை விட இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்த நேதன் லயனுக்கு எதிராக தனது கேரியரில் இதுவரை புஜாரா 532* ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை தகர்த்துள்ள புஜாரா தனித்துவமான புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. செடேஸ்வர் புஜாரா : 532*, நேதன் லயனுக்கு எதிராக
2. குமார் சங்ககாரா : 531, சயீத் அஜ்மலுக்கு எதிராக
3. ஸ்டீவ் ஸ்மித் : 520, ஸ்டுவர்ட் பிராட்க்கு எதிராக
4. கிரகாம் கூஜ் : 517, கபில் தேவுக்கு எதிராக

Advertisement